நீங்கள் திடீரென்று பரலோகத்துக்குள் நுழைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு இருக்கும் மகிமையைக் கண்டு மலைத்துப்போய் நிற்கிறீர்கள். கோடானுகோடி தேவதூதர்களும், சகல பரிசுத்தவானகளும் அங்கே இருக்கிறார்கள். அப்போது அவர்கள் அத்தனைபேரின் கண்களும் காண மகா உன்னதமானவர் தனது சிங்காசனத்தில் இருந்து உங்கள் பெயரைச் சொல்லி அழைக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கணம் உங்களுக்கு எப்படியிருக்கும்!!??
வாசிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது அல்லவா? ஆம், உண்மையிலேயே ஒரு நாள் இது நடக்கத் தான் போகிறது. அந்த கணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். உலகம் எதை எல்லாம் மேன்மை என்று கருதுகிறதோ அதெல்லாம் அப்போது குப்பையாகத் தெரியுமல்லவா? இன்று முழு உலகத்தாலும் கொண்டாடப்படுகிற ஒரு நபராக இருந்தும் அந்த நாளில் “உன்னை அறியேன்” (மத்தேயு 25:12) என்று ஆண்டவர் சொல்வாரானால் அது அந்த நபருக்கு எத்தனை நிர்பாக்கியமான நிலைமையாக இருக்கும்! ஆம், உண்மை அதுதான். நாம் கர்த்தரை அறிந்திருப்பதும், அவரால் அறியப்பட்டிருப்பதுமே மெய்யான ஆசீர்வாதம்.
நான்கு நாட்களாய் நாறிக்கிடந்த லாசருவின் சரீரத்திற்கு உயிர்தந்தது அற்புதம்தான். என்றாலும், ஒரு மனிதன் தனது நாற்பதாவது வயதில் இரட்சிக்கப்படுவானானால், நாற்பது வருடங்களாக மரித்துக்கிடந்த அவனை தேவன் உயிர்ப்பித்ததே பெரிய அற்புதமாகும். அதனால்தான் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருப்பதாக லூக்கா 15:7 சொல்லுகிறது.
அவர் கொடுப்பதெல்லாம் மகா சிறந்த கொடைகளாயிருப்பினும், அந்தக் கொடைகளைப் பெறுவதல்ல, கொடுப்பவரால் அறியப்பட்டும், நேசிக்கப்பட்டும் இருப்பதுதான் மேன்மையான பாக்கியம். வேறு யாரிடத்தில் போவோம்? நித்திய ஜீவ வசனங்கள் அவரிடத்தில் உண்டே!
தீர்க்கதரிசியாகிய எரேமியா கதறுகிறார், “என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்”. (எரேமியா 31:18)) இந்த உலகமே பொல்லாங்கனுக்குள் கிடக்கும்போது, அந்தப் பொல்லாங்கிலிருந்து நாம் விலக்கப்படுவதே மெய்யான ஆசீர்வாதம் என்று அப்போஸ்தலர் நடபடிகள் 3:26 சொல்லுகிறது. என்னைத் திருப்பும் என்று எரேமியா கதறியதன் பொருள் என்னால் என்னை நானே திருப்பிக்கொள்ள முடியாது என்பதுதான். நமது மனதைத் திருப்புவதும், நம்மை பொல்லாங்குக்கு விலக்குவதும் தேவனால் மட்டுமே கூடிய செயலாகும்.
ஒரு மனிதனை தேவன் அவன் போக்கிலேயே விடுவதுதான் இந்த உலகிலேயே மகா மோசமான சாபக்கேடாகும் என்று ஒரு வேதஅறிஞர் கூறுகிறார். ஆனால் நாமோ நமது மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்படிருப்பது (1 பேதுரு 2:25) எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!
நாம் பங்குபெறும் திருவிருந்தின் பாத்திரத்தை ஆசீர்வாதத்தின் பாத்திரம் என்று 1 கொரிந்தியர் 10:16 சொல்லுகிறது. கிறிஸ்துவால் திருப்பப்பட்டவர்கள் அவரது திருப்பந்தியில் பங்குபெறுவது ஒரு மேன்மையான சிலாக்கியம். அவரோடு ஏற்பட்ட உறவினால்தான் அந்த மேன்மையான விருந்தில் நாம் பங்குள்ளவர்களாகிறோம்.
இந்த உலகம் பல்வேறு காரியங்களை ஆசீர்வாதம் என்று கருதிக் கொண்டிருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை கிறிஸ்துவோடு இருக்கும் உறவுதான் மற்ற எல்லாவற்றோரும் இருக்கும் உறவைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது. அவருக்கு எல்லாமே சொந்தமானதாக இருக்க, நாம் அவருக்கு சொந்தமானவர்களாக இருக்க நாம் அவைகளைத் தேடி அவைகளின் பின்னே ஓட வேண்டிய அவசியமில்லை.
அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையான ஆசீர்வாதம் எதுவென்று:
காரணம், நான் ஆசீர்வாதங்களையல்ல, ஆசீர்வதிக்கிறவரைச் சார்ந்துகொள்ளுகிறவர்கள்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/M0o3D5Dh2PA