வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு நபர் விடுமுறைக்கு தன் குடும்பத்தாரை சந்திக்க ஊருக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். பிள்ளைகளுக்கு அப்பா வெளிநாட்டில் இருந்து வருவது சந்தோஷம் என்றாலும், தங்களுக்கு என்ன என்ன பரிசுகளை வாங்கிக் கொண்டு வரப்போகிறார் என்பதில் தான் ஆவலாக இருப்பார்கள். ஆனால் அவரது மனைவியோ கணவரின் நலத்தைக் குறித்தே கரிசனை உள்ளவராக இருப்பார். ஏனெனில் கணவன் தனக்குரியவராக, தன் கூடவே இருக்கும் வரை இவருக்குரிய சகலமும் தனக்குரியது தான் என்பதை மனைவியோ நன்கு அறிந்திருக்கிறார்.
பரிசுத்த ஆவியானவரும் அப்படித்தான்! அவர் நமக்குக் கொண்டுவரும் ஆசீர்வாதங்களைவிட அவர் நம்மோடும், நமக்குள்ளும் வசிப்பதுதான் நமக்கு மிகச்சிறந்த ஆசீர்வாதம். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னம் அல்லது அபிஷேகம்தான் ஒரு மனிதன் தேவனால் அழைக்கப் பட்டிருகிறான் என்பதை அடையாளப் படுத்துகிறதாயும், உறுதிப்படுத்துகிறதாயும் இருக்கிறது. நாம் மீட்பின்நாளில் மீட்கப்படுவோம் என்பதற்கான முத்திரையாக பரிசுத்த ஆவியானவர்தான் இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் அருளும் வரங்களைப்பற்றி வேதத்தில் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அப்போஸ்தலர் 2:38 சொல்லுகிறபடி அவரே நமக்கு வரமாக, ஆசீர்வாதமாக அருளப்பட்டிருக்கிறார்.
பரிசுத்த ஆவி ஒரு மனிதனுக்குள் இருந்தால் அவனை அவர் வேறு மனுஷனாக மாற்றுகிறார். அவரது பெயரே பரிசுத்த ஆவியானவர் என்றிருப்பதால் அவர் நமக்குள் பரிசுத்தத்தை உருவாக்குகிறவராக இருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் தனக்குள் இருப்பதே விசேஷம் என்று புரிந்துகொண்டவர்கள் யாவரும் விசேஷித்தவர்களாகவே நடந்துகொள்வார்கள்.
மத்தேயு 7:11- இல் உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்று எழுதப்பட்டிருக்கிறது. அதே வசனம் லூக்கா 11:13- இல் பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? என்று எழுதப்பட்டிருக்கிறது. இதிலிருந்து “பரிசுத்த ஆவியானவர் = நன்மை” என்பதை நிச்சயமாகவே அறியலாம்.
நான் இரட்சிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆயிற்று, நான் இரட்சிக்கப்படும்போதே பரிசுத்த ஆவியானவர் எனக்குள் வந்துவிட்டாரெனில், நான் நன்மைகளை மட்டும் ஏன் இன்னமும் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறேன்? என்று சிலர் எண்ணலாம். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் இருப்பது உண்மைதான். ஆனால் அவருக்கும் நமக்கும் இருக்கும் உறவு எப்படி இருக்கிறது என்பதே நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகளின் அளவைத் தீர்மானிக்கிறது.
நாம் ஆவியானவரோடு உறவாடும்போது அவர் நமக்கு போதித்து நம்மை நடத்துகிறார். உன் வழிகளிலெல்லாம் அவரை அங்கீகரித்துக்கொள் அப்போது அவர் உன் பாதையை வாய்க்கப்பண்ணுவார் என்று நீதிமொழிகள் 3:6 சொல்லுகிறது. அவரை நினைத்துக்கொள் என்று எழுதப்பட்டிருக்கும் அந்த வசனத்தின் உண்மையான பொருள் அங்கீகரித்துக்கொள் என்பதாகும். அப்போது ஆவியானவர் உங்களுக்கு ஆவிக்குரிய ஆலோசனைகள் மட்டுமல்ல உங்கள் வாழ்வின் அனைத்து பகுதிகளையும் பொறுப்பெடுத்து வழிநடத்தி, ஆலோசனை தந்து உங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் வளமாக்குவார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Odu1bNe5x3k