விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 1

Home » விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 1

விசுவாசியுங்கள் அப்பொழுது – பாகம் 1

விசுவாசமானது நம்பப் படுகிறவைகளின் உறுதியும், காணப் படாதவைகளின் நிச்சயமுமாய் இருக்கிறது என்று வேதம் எபிரேயர் 11:1ல் கூறுகிறது. ஆனால் காணப்படாதவைகள் காணப்படும் வரைக்கும் என்ன செய்வது? நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்று கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று கர்த்தராகிய இயேசு சொல்லி இருக்கிறார். (மாற்கு 11:24) அந்த “அப்பொழுது” என்ற பொழுது எப்பொழுது வரும்? அது வரும்வரை நாம் என்ன செய்து கொண்டிருப்பது என்பதைத்தான் இந்தச் செய்தியில் பார்க்கப்போகிறோம்.

ஒருவர் தோட்டத்தில் ஒரு விதையை நடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நட்ட பின்னர் அவர் என்ன செய்வார்? நட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றுவார் அல்லவா? அதைப் பார்ப்பவர்கள் கண்களுக்கு வெறுந்தரையில் தண்ணீர் ஊற்றுவது போலத்தான் இருக்கும். ஆனால் நட்டவருக்குத்தான் தெரியும் உள்ளே ஒரு ஜீவனுள்ள விதை நடப்பட்டிருக்கிறது என்பது. அவர் அந்த விதை வளர்ந்து கனிதரும் வரை என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துகொண்டே இருப்பார். ஒருவேளை அவர் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாதது போலத் தெரிந்தால் உடனே தன் முயற்சியைக் கைவிட்டுவிடமாட்டார். அப்பொழுதுதான் இன்னும் அதிகமான பராமரிப்பை அந்த மரத்துக்குத் தருவார்.

வேதவசனமும் விதைதான். அதிலும் அது அழிவில்லாத, நிச்சயம் பலன் தரக்கூடிய தரமான விதையாகும். அதை இருதயமாகிய நிலத்தில் விதைத்துவிட்டு அந்த நல்ல தோட்டக்காரர் செய்த அதே செயலைத்தான் நாமும் செய்ய வேண்டும். அந்த வசனமாகிய விதை விளைந்து நற்கனிகள் தரும்வரை என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும், புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டே இருக்க வேண்டும், விசுவாசித்துக் கொண்டே இருக்க வேண்டும், கீழ்ப்படிந்துகொண்டே இருக்க வேண்டும். அந்த நல்ல விதை ஒருநாள் தனது கனியைத் தராமல் போகவே போகாது.

இந்த விசுவாச முயற்சியானது ஏதோ ஒருநாளில் திடீரென்று வந்துவிடுவதல்ல. விசுவாசத்தின் தகப்பனான ஆபிரகாமே இதை படிப்படியாகத்தான் கற்றுக்கொண்டார். கர்த்தர் ஈசாக்கை பலியிடும்படி சொன்னபோது மூன்று நாட்கள் ஈசாக்குடன் அவர் பயணித்து குறித்த மலைக்கு அருகே நின்று தனது வேலைக்காரரிடம் நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் (ஆதியாகமம் 22:5) என்று உறுதியாகச் சொல்லுமளவுக்கு அவர் விசுவாசத்தில் பலப்பட்டது ஒருநாளில் நடந்ததல்ல.

கர்த்தர் ஆபிரகாமுக்கு சந்ததியைத் தருவேன் என்றதும் அந்த வாக்குத்தத்தம் தாமதிக்கையில் அதை அடைந்துகொள்ள ஆபிரகாம் தனது சொந்த முயற்சியில் முயன்று இஸ்மவேலைப் பெற்றுக்கொண்ட வரலாறெல்லாம் நமக்குத் தெரியும். அப்படி விசுவாசத்தில் பலவீனமாக இருந்தவர்தான் கர்த்தரோடு நடக்க, நடக்க அவரிடத்தில் கற்றுக்கொள்ள, கற்றுக்கொள்ள விசுவாசத்தில் வல்லவராக உருவெடுத்தார் என்று நாம் பார்க்கிறோம்.

தேவன் நம்முடைய ஆத்துமாவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவர் நமக்குள் வேலை செய்யச் செய்ய நாம் பெலப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். நம்மில் விசுவாசத்தைத் துவக்கியது அவர்தான், அவரே அதை சம்பூரணமாக முடித்து வைக்கவும் செய்வார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரோடு இசைந்து அவருக்கு ஒத்துழைப்பு நல்குவதுதான்.

நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது என்று எபிரேயர் 10:36 கூறுகிறது. அதற்கு முந்தின வசனத்தில் உள்ளதுபோல மிகுந்த பலனுக்கு(reward) ஏதுவான தைரியத்தை விட்டுவிடாதிருப்பதுதான் பொறுமைகாப்பது ஆகும். ஆம், தைரியத்தை விட்டுவிடுவது பலனை இழந்துவிடுவதற்குச் சமம்.

நாம் எதை விசுவாசித்தோமோ அதை அடைந்துகொள்ளும் நாள் ஒன்று வரும். அந்த நாள்வரை அந்த விசுவாச வார்த்தை நமது வாயைவிட்டுப் பிரியாமல் அதைச் செய்ய நாம் இரவும் பகலும் கவனமாக இருப்போமாக. அந்த வாக்குத்தத்தத்தை நமக்குத் தந்த கர்த்தராகிய இயேசுவை நோக்கி கண்களைப் பதிய வைப்பதன் மூலம் நம்மை நெருக்கி நிற்கும் பாரங்களையும், பாவங்களையும் தள்ளிவிட்டு நமது ஓட்டத்தை தொடர்ந்து ஓடக்கடவோம். நாம் வார்த்தை வடிவில் பார்த்து விசுவாசித்த வாக்குத்தத்த்தை வாழ்க்கையாகவும், வாழவைக்கும் வல்லமையாகவும் பெற்று அனுபவிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/oSr_ZTtGWpc

>