உங்கள் வீட்டில் ஒரு பிரச்சனை இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப் பிரச்சனை குறித்துப் பேசச் சொன்னால் உங்களால் அதுபற்றி மணிக்கணக்கில் பேச முடியும். அதுகுறித்து ஆதியோடந்தமாக அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் அந்தப் பிரச்சனை குறித்து தேவன் என்ன சொல்லுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில் அந்தப் பிரச்சனை குறித்து தேவன் என்ன சொல்லுகிறாரோ அதுதான் உங்கள் தீர்வுக்கான திறவுகோலாக இருக்கிறது.
இன்று அநேகர் தங்கள் பிரச்சனைகளை தேவனிடத்தில் முறையிடுவதில்லை. நாம் அவரிடத்தில் நம்முடைய பிரச்சனைகளைக் கொண்டுபோய் முறையிடத்தான் வேண்டும், ஏனெனில் அவர் என்னை நோக்கிக் கூப்பிடு என்று நமக்குச் சொல்லியிருக்கிறார். நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்போது அவர் தமது வாக்குத்தத்ததின்படியே (எரேமியா 33:3) நமக்கு மறுஉத்தரவு அருளிச்செய்து, நாம் அறியாததும் நமக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை நமக்கு அறிவிக்கிறார். அவர் நமக்குத் தெரிவிக்கிறதை நாம் நமது வாயினால் அறிவிப்பதுதான் விசுவாச அறிக்கையாகும்.
இதை எளிதில் நினைவு வைத்துக்கொள்ளும் வகையில் “குறித்து, பார்த்து, சொல்லவேண்டியது” என்று சொல்லலாம். அதாவது அந்தப் பிரச்சனை குறித்து தேவன் சொல்லுவதை, அந்தப் பிரச்சனையை பார்த்து நாம் சொல்ல வேண்டியதாகும். அப்படி நாம் அந்த மலையைப் பார்த்துப் பேசும்போது அது நாம் சொன்னபடியே தள்ளுண்டுபோகும்.
தரிசனப் பள்ளத்தாக்கின் நிகழ்வுகளைக் கொஞ்சம் தியானித்துப் பாருங்கள். தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலை கர்த்தர் தரிசனப் பள்ளத்தாக்குக்கு கொண்டுபோய் அங்கு குவிந்து கிடக்கும் உலர்ந்த எலும்புகளை நோக்கி தீர்க்கதரிசனம் உரைக்கச் சொல்லுகிறார். அந்த உலர்ந்த எலும்புகளைக் குறித்து தேவன் என்ன சொன்னாரோ அதை அந்த உலர்ந்த எலும்புகளைப் பார்த்து தீர்க்கதரிசி சொல்லுகிறார்.
அப்போது நிகழ்ந்தது என்ன கர்த்தருடைய ஆவி அந்த எலும்புகளுக்குள் பிரவேசிக்க, அந்த எலும்புகள் உயிரடைந்து பெரிய சேனையாக நின்றார்கள் என்று பார்க்கிறோம். கர்த்தருடைய ஆவியையும் வார்த்தையையும் பிரிக்க முடியாது. தேவனுடைய வார்த்தை ஆவியாயும், ஜீவனாயும் இருக்கிறது. நாம் பேசும்போதே வார்த்தையோடு சேர்ந்து காற்றும் வெளிப்படுவது போல தேவவார்த்தை பேசப்படும்போதே ஆவியானவரும் அந்த வார்த்தையோடு வெளிப்பட்டு கிரியை செய்கிறார்.
இதுதான் நமது வாழ்க்கையிலுள்ள பிரச்சனைகளை அகற்ற தேவன் கையாளும் முறைமை. அந்த முறைமையைக் கற்றுக்கொண்டு நாம் அதின்படி செய்யும்போது தீர்வைக் கண்டடைகிறோம். உலர்ந்த எலும்புகள் சேருவதற்கும், அவைகளில் அசைவுண்டாகவும், அங்கு இரைச்சல் உண்டாகவும் என்ன காரணம்? எசேக்கியேல் 37:7- இல் அவர் எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன் என்று தீர்க்கன் கீழ்படிந்ததில்தான் அந்த மகா அற்புதத்தின் இரகசியம் ஒளிந்திருக்கிறது.
அந்த தீர்க்கதரிசனம் உரைத்தலாகிய விசுவாச அறிக்கையை நாம் எதுவரை செய்ய வேண்டும்? உலர்ந்த எலும்புகள் உயிரடைந்து ஒரு சேனையாக எழும்பி நிற்குவரை நாம் செய்துகொண்டே இருக்க வேண்டும். 2 இராஜாக்கள் 13- ஆம் அதிகாரத்தில் வரும் ஒரு நிகழ்வை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் தீர்க்கதரிசியாகிய எலிசாவிடம் போகிறான், அப்போது எலிசா மரணப்படுக்கையில் இருக்கிறார். அவர் ராஜாவை நோக்கி அம்புகளை எடுத்து தரையில் அடியும் என்கிறார். உடனே ராஜா அவன் மூன்றுதரம் அடித்து நின்றான். அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்று கூறுகிறார்.
ஆம், நாம் சில வேளைகளில் அறியாமையாலும், அவிசுவாசத்தினாலும் நமது விசுவாச முயற்சிகளை பாதியில் நிறுத்திக் கொள்கிறோம். நாம் செய்ய வேண்டியதை விடாப்பிடியாக இறுதிவரை உறுதியுடன் நின்று செய்யும்போது வார்த்தைகளால் விவரிக்க இயலாத அற்புதங்களைக் கண்டு அனுபவிக்க முடியும். கர்த்தர் சொன்னவைகளை அவை நிறைவேறுமளவும் விடாமல் விசுவாசத்தோடு பேசிக்கொண்டேயிருப்பதுதான் அற்புதத்தைப் பெற்றுக்கொள்வதற்கான சூட்சுமமாகும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/fOM-l8XA4XQ