விசுவாசத்தின்மேல் உறுதிப்படுத்திக்கொண்டு – பாகம் 2

Home » விசுவாசத்தின்மேல் உறுதிப்படுத்திக்கொண்டு – பாகம் 2

விசுவாசத்தின்மேல் உறுதிப்படுத்திக்கொண்டு – பாகம் 2

தேவன் யார், அவர் என்ன சொல்லி இருக்கிறார், என்ன செய்திருகிறார், என்ன செய்துகொண்டு இருக்கிறார், என்ன செய்யப் போகிறார். இவைகளுடைய தொகுப்புதான் உபதேசம். இந்த உபதேசமாகிய அறிவின் ஒளியை நாம் பெற்றிருந்தோம் ஆனால் நாம் விசுவாசத்தில் உறுதிப்பட்டு அதன் அடிப்படையில் பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்க முடியும்.

ஆனால் அவர் என்ன சொல்லி இருக்கிறார் என்பதையும், என்ன செய்து கொண்டடு இருக்கிறார் என்பதையும், என்ன செய்யப் போகிறார் என்பதையும் அறியாதவர்கள் அவருடைய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள மனுஷீக முறைமைகளைப் பின்பற்றுகிறார்கள். தேவ நீதியை அறியாதபடியால் சுயநீதியை நிலைநிறுத்த முற்படுகிறார்கள். நம்முடைய வழிகள் அவருடைய வழிகளல்ல, நம்முடைய நினைவுகள் அவருடைய நினைவுகளும் அல்ல, எனவேதான் உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும் என்று சங்கீதக்காரன் விண்ணப்பம் பண்ணுகிறார். (சங்கீதம் 25:4)

நீங்கள் அவரைப் பற்றி என்ன அறிந்திருக்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் என்ன நம்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. நீங்கள் என்ன நம்புகிறீர்களோ அதன் அடிப்படையில்தான் உங்கள் ஜெபங்களும், கிரியைகளும் இருக்கும். அவர் விளையச் செய்கிற தேவன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்களானால், உங்களுக்குள் நடுதலும், நீர்ப்பாய்ச்சுதலுமான விசுவாசத்தின் கிரியைகள் இருக்கும்.

அவரைக் குறித்த சரியான அறிவு நம்மை அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கியிருக்க வைக்கிறது. அவருடைய வாக்குத்தத்தங்களைக் குறித்த நிச்சயம் நமக்கு நிம்மதியைத் தருகிறது. வாக்குத்தத்தங்கள் பெற்றவர்கள் வாக்குவாதம் செய்ய மாட்டார்கள். எல்லா வாக்குத்ததங்களும் நம்மைக் குறித்த தேவனுடைய நோக்கத்தையே முக்கியப்படுத்துகிறது. அதை அறிந்தால் நமது காத்திருப்பின் காலம் சமாதானமாகவும், இளைப்பாறுதல் மிகுந்ததாகவும் இருக்கும்.

அவருடைய முறைமைகளை அறிகிற அறிவும், அவர் நம்மை அறிந்திருக்கிறார் என்ற அறிவும் பிரதானமாக நமக்குத் தேவை. அதை அறியாதபோதுதான் அவிசுவாசத்தின் விளைவாக நமது ஜெபங்கள் நீண்ட ஜெபங்களாகிப் போகின்றன. நீண்டநேரம் ஜெபம் செய்வதில் தவறில்லை. ஆனால் நீண்டநேரம் ஜெபித்தால்தான் அவர் கேட்பார் போன்ற சிந்தனைகளும், உபதேசங்களும் அறியாமையின் விளைவேயன்றி வேறல்ல. அவர் நம்மைத் தாயின் கருவில் உருவாகுமுன்னே அறிந்திருக்கிறார் (எரேமியா 1:5) என்பதையும், நமது நாவில் சொல் பிறவாததற்கு முன்னமே அதை அவர் அறிந்திருக்கிறார் (சங்கீதம் 139:4) என்பதையும் நாம் அறிந்திருப்போமானால் நமது ஜெபங்கள் விசுவாசத்தில் சாரமேறினதாக இருக்கும்.

சில நேரங்களில் நமக்கு வரவேண்டிய நன்மைகள் தாமதமாகலாம். அதுபோன்ற சூழல்களில் தேவனை அறிந்தவர்களுடைய மனம் உறுதியாக அவரை நம்பியிருக்கும். அவர்கள் கர்த்தருடைய முறைமைகளை அறிந்திருப்பதால் அவர் அதிசயமாக தன்னுடைய காரியத்தை முடித்துத்தருவார் என்று பொறுமையோடு காத்திருப்பார்கள். அவர் சொன்ன சொல் மாறமாட்டார், அதுமாத்திரமல்ல அவர் தம்முடைய வார்த்தையை நமக்கு நினைப்பூட்டி நமக்கு திட நம்பிக்கையையும் தருகிறவராகவும் இருக்கிறார். அவர் சொன்னதை நினைப்பூட்டுகிற தேவனாக இருக்கிறபடியால் நாம் அவர் சொன்னதை வைத்தே அவரிடம் போகும்போது அவர் தாம் சொன்னவவைகளை நிறைவேற்றுகிற தேவனாக இருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/0S6gWnAHG44

>