உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக என்று சங்கீதக்காரன் பாடுகிறார். (சங்கீதம் 43:3) அந்த வெளிச்சம் கர்த்தருடைய வார்த்தை தான். ஆதியிலே தேவனோடும், தேவனாகவும் இருந்த அந்த வார்த்தை மனுஷருக்கு ஒளியாய் இருந்தது என்று வேதம் சொல்லுகிறது. (யோவான் 1:1-4)
சூரியன் நமக்கு வெறும் வெளிச்சத்தை மட்டும் தருவதில்லை, அந்த வெளிச்சத்துக்குள் வாழ்விக்கும் வல்லமையும் ஒளிந்திருக்கிறது. அதனால்தான் சூரிய ஒளியில் தாவரங்கள் வளருகின்றன. அதுபோலத்தான் தேவனுடைய வெளிச்சமாகிய வார்த்தைக்குள் நம்மை வாழ்விக்கும் வல்லமை இருக்கிறது. இந்த பூமியில் பல்வேறு விதமான பாடுகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் மனிதனுக்குத் தேவை தேவனுடைய வார்த்தைதான்.
ஒரு மருத்துவரிடம் போனால் மருந்துதானே கேட்போம். அந்த விதத்தில்தான் கர்த்தராகிய இயேசுவிடம் நூற்றுக்கதிபதி “ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்” என்று வார்த்தையைக் கேட்டான். ஏனெனில் அவர் பரிகாரியானால் அவருடைய வார்த்தைதான் பரிகாரம், அதாவது மருந்து.
ஆதியில் இருந்த இருளையும், ஒழுங்கின்மையையும், வெறுமையையும் தேவனாகிய கர்த்தர் தமது வார்த்தையைக் கொண்டுதான் மாற்றினார். இன்றும்கூட கர்த்தரை அறியாத மனித மனங்களில் இருளும், ஒழுங்கின்மையும், வெறுமையும் குடிகொண்டிருக்கிறது. அந்த இருளை நீக்க, ஒழுங்கின்மையைப் போக்க வெறுமையை நிரப்ப வார்த்தையே பரிகாரம்.
இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் என்று 2 கொரிந்தியர் 4:6 சொல்லுகிறது. அந்த வார்த்தையாகிய வெளிச்சம் நம்முடைய இருதயங்களில் பிரகாசிக்கும்போது, அது நமது ஆவிக்குரிய கண்களைத் திறந்து ஒரு பிரச்சனையை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, அதை எப்படி மேற்க்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தருகிறது.
கர்த்தருடைய வார்த்தை நமது கவலைகளையெல்லாம் அவர் மேல் இறக்கி வைக்கக் கற்றுத்தருகிறது, ஏனெனில் அவரே நம்மை விசாரிக்கிறவர் என்ற அறிவைத் தருகிறது, அவர் விசாரித்தால் மறுவிசாரணைக்கு அவசியமில்லை. ஏனெனில் அவர் முற்றுமுடிய இரட்சிக்கிறவர். அவருடைய வார்த்தை எப்பேற்பட்ட பேதையையும் ஞானியாக்கும். அவரே உலகத்தில் வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற பேரொளியாக இருக்கிறார்.
எத்தகைய இருளின் பிடியில் கிடந்தாலும் அவரது வார்த்தையால் பிரகாசிப்பிக்கப்ப்ட்ட பின்னர் ஒரு மனிதனால் ஒரு சேனைக்குள் பாய முடியும், எந்த மதிலையும் தாண்ட முடியும். ஏனெனில் அந்த வார்த்தையே நமக்கு பெலனாகவும் இருக்கிறது. அல்லேலூயா!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/g2w9jQtWA14