பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – பாகம் 1

Home » பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – பாகம் 1

பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – பாகம் 1

உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக என்று சங்கீதக்காரன் பாடுகிறார். (சங்கீதம் 43:3) வெளிச்சமும் சத்தியமும் நம்மை கர்த்தருடைய பர்வதத்துக்கு நடத்திக் கொண்டு போகிறது. அது எப்படிப்பட்ட பர்வதமாக இருக்கிறது? நமக்கான அனைத்தையும் பார்த்துக்கொள்ளக்கூடிய, நமது தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படக்கூடிய இடமாக அந்தப் பர்வதம் இருக்கிறது என்று ஆதியாகமம் 22:13 சொல்லுகிறது.

நமது தேவைகளில் பிரதானத் தேவையாக இருப்பது மீட்புதான். ஏனெனில் பாவத்தின் விளைவாகத்தான் மனிதன் தேவனைவிட்டுப் பிரிக்கப்பட்டான். ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கட்டளையை மீறினபின்பு தாங்கள் நிர்வாணிகளாக இருந்ததன் நிமித்தம் அவமானத்துக்குப் பயந்து தங்களை ஒளித்துக் கொண்டார்கள் என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

இது தனிமனிதப் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பிரதானப் பிரச்சனை. ஏனெனில் நாம் எல்லோரும் பாவம் செய்து கெட்டுப்போனோம் என்று வேதம் சொல்லுகிறது. பாவத்தின் விளைவாக வந்த அந்த அவமானத்தைப் போக்கிக் கொள்ளத்தான் இன்று மனிதர்கள் பணத்தின் பின்னாலும், மதத்தின் பின்னாலும் ஒளிந்து கொள்ளுகிறார்கள். மனுஷன் வேஷமாகவே திரிகிறான் என்று வேதம் சொல்லுவது இதைத்தான். அறிவியலால் இந்தப் பிரச்சனையை சரிசெய்ய முடியாது. இதற்கான தீர்வு கல்வாரிச் சிலுவையில் மாத்திரமே இருக்கிறது.

பாவம் என்கிற பிரச்சனை வெளியே இருந்து உள்ளே வந்தால் அதை சரிசெய்ய வாய்ப்பிருக்கிறது. ஆனால் மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மாற்கு 7:15- ல் சொல்லியிருக்கிற படியால் உள்ளத்தைச் சரிசெய்வதற்கு நாம் அவரிடம்தான் செல்லவேண்டியதாக இருக்கிறது. அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்று யோவான் 7:38 சொல்லுகிறது.

கல்வாரி எனும் அந்தப் பர்வதம் நம்முடைய வாழ்வில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஏசாயா 53- ஆம் அதிகாரம் தெளிவாக விளக்குகிறது. நம் அனைவருடைய ஒட்டுமொத்தப் பாவத்தையும் கர்த்தர் தமது ஒரே பேரான குமாரன்மீது விழப்பண்ணினார் என்று வாசிக்கிறோம். குமாரன் தன்னை அந்த மீட்பின் திட்டத்துக்கு உவந்து ஒப்புக்கொடுத்ததன் நிமித்தம் நாம் இன்று ஜீவனோடிருக்கிறோம். நாம் நன்றாக இருக்கும்படியாக அவர் அடிக்கப்பட்டார். நம்முடைய பாவங்கள் அவர் பர்வதத்தில் சுமந்து தீர்க்கப்பட்டது. நம் பாவங்களை சுமந்து தீர்த்தவர்தான் நமது சுமையையும் இன்று நீக்குகிறவராக இருக்கிறார்.

இந்த நற்செய்தியைக் கேள்விப்பட்டு விசுவாசிக்கிற நமக்கு கர்த்தருடைய புயம் வெளிப்படும். (ஏசாயா 53:1) இது நடைமுறையில் எப்படி செயல்படுகிறது? கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படுவது என்றால் என்ன? அது எப்படி நடைபெறுகிறது என்றால், அவர் நமக்காக சிலுவையில் செய்து முடித்ததை நாம் விசுவாசிக்கும்போது அவர் தாம் செய்து முடித்ததை நமது வாழ்வில் செயல்படுத்துகிறவராக இருக்கிறார். வார்த்தையாகிய தேவன் தான் செய்து முடித்ததை வார்த்தையால்தான் செயல்படுத்துகிறார்.

யோவான் 4- ஆம், அதிகாரத்தில் வியாதிப்படுக்கையில் கிடக்கிற தன்னுடைய மகனை சுகமாக்கும்படி கர்த்தரிடம் வந்து ஒரு மனுஷன் வேண்டுகிறான். அவனிடம் அவர் “நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான்” என்றார். உடனே அந்த மனுஷன், கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான் என்று வேதத்திலே வாசிக்கிறோம். அவருடைய வார்த்தையை நம்பிப் போகும்போதுதான் அவர் பர்வதத்தில் செய்து முடித்ததை நம்முடைய அனுதின வாழ்க்கையில் பெற்று அனுபவிக்க முடியும். தேவன் சகலத்தையும் தம்முடைய வார்த்தையினால்தான் செய்கிறார். அந்த சகலத்தையும் நாம் விசுவாசத்தினால்தான் பெற்றுக்கொள்ள முடியும்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/7ZtUHqeyt28

>