ஞானத்தின் ஏழு தூண்கள்

Home » ஞானத்தின் ஏழு தூண்கள்

ஞானத்தின் ஏழு தூண்கள்

நாம் கிரியைகளினாலே இரட்சிக்கப்படுவது இல்லை, ஆனால் கிரியை செய்வதற்காகவே கர்த்தர் நம்மை இரட்சித்திருக்கிறார். அந்தக் கிரியைகள் நமக்குள்ளிருந்து ஆவியானவர் வளர்த்தெடுக்கும் அற்புதமான குணங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன. நம்முடைய இலக்கே கிறிஸ்துவுக்கு ஒப்பான பூரண புருஷராக மாறுதல் என்பதாக இருக்கிறபடியால் நமக்குள் சுபாவ மாற்றங்கள் ஏற்படுவது அத்தியாவசியமாக இருக்கிறது.

பரம கானானை நோக்கியதான நமது விசுவாசப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் கர்த்தராகிய தேவன் நமது குணத்தில் தெய்வீக மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறார். ஏனெனில் ஒவ்வொரு குணத்துக்கும் ஒரு திறவுகோல் இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனியேயருக்கு எழுதின முதலாம் நிருபத்தில் அவர்களை பாராட்டும் விதமாக ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறுகிறார். “தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து…” (1 தெசலோனிக்கேயர் 1:2)

இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது என்று 1 கொரிந்தியர் 13:13 சொல்லுகிறது. இங்கே பவுல் விசுவாசத்தின் கிரியை, அன்பின் பிரயாசம் மற்றும் நம்பிக்கையின் பொறுமை ஆகிய மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார். இந்த மூன்று குணங்களோடும் இணைந்த மூன்று சுபாவங்களை நாம் இங்கு காணலாம். கிரியைகளில்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு 2:20 குறிப்பிடுகிறது. விசுவாசம் அதில் செய்யப்படும் கிரியைகள் மூலமாகத்தான் அறியப்படுகிறது. நமக்குள் இருக்கும் ஆவியானவர் வார்த்தையின் மூலம் நமக்குள் விசுவாசத்தை பெருகச்செய்கிறவர் மட்டுமல்ல, அந்த விசுவாசத்தை கிரியைகளின் மூலம் அப்பியாசப்படுத்தவும் நமக்கு உதவுகிறவராக இருக்கிறார்.

அன்பு அந்த அன்பின் விளைவாக நாம் படும் பிரயாசங்களில் வெளிப்படுகிறது. அன்புகூருதலை இன்னொரு விதமாகச் சொன்னால் “சகித்துக் கொள்ளுதல்” என்பதாகும். நாம் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ளுகிறவர்களாகக் காணப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அன்பு என்பது கொடுக்கும் சுபாவமுடையது. தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் என்று யோவான் 3:16 சொல்லுகிறது. தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனைக் கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தார்.

நம்பிக்கையானது பொறுமையில் வெளிப்படுகிறது. ஒருவர் “கர்த்தாவே எனக்குப் பொறுமையைத் தாரும், அதுவும் உடனடியாக, இப்பொழுதே தந்தருளும்” என்று ஜெபித்தாராம். பொறுமை என்பது கர்த்தர் நமக்குள் உருவாக்கும் ஒரு உன்னத சுபாவமாகும். நாம் விசுவாசத்தின் கிரியையிலும், அன்பின் பிரயாசத்திலும், நம்பிக்கையில் பொறுமையிலும் பெருகுகிறவர்களாகக் காணப்பட வேண்டும். ஏனெனில் எத்தனை வருடம் கிறிஸ்தவனாக இருந்திருக்கிறோம் என்பது நாம் எந்த அளவுக்கு கிறிஸ்துவைப்போல மாறியிருக்கிறோம் என்பதில் புலனாகிறது. இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாய் இருக்கவொட்டாது என்று 2 பேதுரு 1:8- இல் வாசிக்கிறோம்.

இந்த தெய்வீக சுபாவத்தில் ஒரு பெருக்கத்தை அப்போஸ்தலனாகிய பவுல் கண்டவராக அதை தனது இரண்டாம் நிருபத்தின் ஆரம்பத்தில் குறிப்பிடுகிறார். சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். (2 தெசலோனிக்கேயர் 1:3,4)

கர்த்தர்தாமே இந்த தெய்வீக சுபாவங்கள் நம்மில் உருவாகி, வளர்ந்து, பெருகக் கிருபை செய்வாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/3wZXmmzKXa8

>