ஞானத்தின் ஏழு தூண்களும் ஏழு குணங்கள் என்று பார்த்தோம். தைரியம், ஞானம் இவைகளைத் தொடர்ந்து மூன்றாவதாக இச்சையடக்கம் வருகிறது. இச்சையை (strong desire) நாம் கட்டுப்படுத்தாவிட்டால் அது நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும். தேவனோடு நமக்கு தொடர்பில்லை என்றால் சிற்றின்பத்தோடு தொடர்புபட்டு விடுவோம், அது துன்பத்தில் போய் முடியும். எனவே நாம் இச்சைகளைக கட்டுக்குள் கொண்டுவரவேண்டியது அவசியமாயிருக்கிறது.
இச்சையடக்கம் என்றால் தேவன் அருளிய எல்லாவற்றையும் தேவஆவியின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்படுத்துவது என்று பொருளாகும். சுயபெலத்தினால் நம்மால் இச்சையடக்கத்தை வளர்த்துக்கொள்ள இயலாது. இது பரிசுத்த ஆவியின் கனியாகும். உண்மையான சுயகட்டுப்பாடு வேண்டுமென்றால் பாவத்தினால் ஆளுகை செய்யப்பட்ட சுயம் பரிசுத்த ஆவியினால் ஆளுகை செய்யப்பட வேண்டும். என்னாலன்றி உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொன்ன வார்த்தைகளை நினைவுகூருவோமாக.
தேவமனுஷனுக்கென்று ஒரு தகுதி இருக்கிறது. இச்சையடக்கம் இல்லாவிட்டால் ஒருவன் தேவமனுஷனுக்குரிய தராதரத்தோடு நடந்துகொள்வது சாத்தியமில்லை. எதுவெல்லாம் நம்மை அடிமைத்தனத்துக்குள் கொண்டு வருகிறதோ அதுவெல்லாம் நமக்கு தகுதியானது அல்ல. நாம் சுயாதீனத்துக்கென்றே விடுவிக்கப்பட்டிருக்கிறோம். பக்திவிருத்தியை உண்டாக்காத பொழுதுபோக்குகள் தேவபிள்ளைகளுக்கு உகந்ததல்ல. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன் என்று அப்போஸ்தனலாகிய பவுல் 1 கொரிந்தியர் 6:12 இல் சொல்லுகிறார்.நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் அதே 1 கொரிந்தியர் 10:31 இல் சொல்லுகிறார். அவர் எதை நியமித்திருக்கிறாரோ அதை அவருடைய மகிமைக்கென்று செய்து முடிக்கும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கிறொம்.
பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நாமே நமது மனதை இணங்க வைப்பது எளிது. எனவேதான் சுயபெலத்தால் இச்சையை மேற்கொள்வது சாத்தியப்படாது. நம்மை பரிசுத்த ஆவியானவரின் வல்லமை நிரப்பும்போது நாம் வசனத்தின் தெய்வீக வெளிச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டு நம் மனம் புதிதாகிறது. அப்படி புதிதாக்கப்பட்ட மனம் சரீரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. ஒரு மனிதனை இச்சையில் விழவைக்க அந்த மனிதனின் மனதுக்குள் அதற்கான விருப்பமும், அந்த விருப்பத்தை நிறைவேற்ற வாய்ப்பும் அவசியம். பிசாசு நமது விருப்பத்தை அறிந்து வாய்ப்பை உருவாக்கிக்கொண்டே இருப்பான். எனவே தேவனுடைய அனுக்கிரகம் இல்லாமல் ஜெயிக்க முடியாது.
இச்சையடக்கம் நமக்குள் செயல்பட நாம் முதலாவது தானியேலைப்போல ஒரு நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாம் வசனத்தின்படியே தீர்மானித்தோம் என்றால் அந்த தீர்மானத்தை நிறைவேற்றுகிறதற்கு என்னென்ன வல்லமையெல்லாம் தேவைப்படுகிறதோ அதையெல்லாம் தேவன் வசனத்தின் வழியாகவே தருகிறார். நாம் செய்ய வேண்டிய இன்னொரு காரியம் சரியான காரியங்களை சிந்திக்க நமது மனதை ஒருமுகப்படுத்துவது. எல்லாவற்றையும் வசனத்தின் அடிப்படை கொண்டே யோசிக்க வேண்டும். அப்படி சிந்திக்கும்போது சீர்படுத்தப்படுகிறோம், அப்படி சீர்படுத்தப்படும்போது நம் வாழ்வு சிறப்படைகிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/kPeA2doIfYU