“என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே” இது போவாஸைப் பார்த்து ரூத் சொன்ன வார்த்தைகள். (ரூத் 2:13) ஆம், ஆறுதல் சொல்லி பட்சமாய் பேசுவது என்பது கர்த்தருடைய சுபாவம். அந்த சுபாவம்தான் போவாஸிடம் வெளிப்படுவதை மேற்கண்ட வசனத்தில் கண்டோம்.
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும்…அதற்குக் கூறுங்கள் என்று கர்த்தர் சொல்வதை ஏசாயா 40:1,2 வசனங்களில் வாசிக்கலாம். 2 கொரிந்தியர் 1:3,4 வசனங்களில் பவுல் தேவனை இரக்கங்களின் பிதா என்றும் சகலவிதமான ஆறுதலின் தேவன் என்றும் வர்ணிக்கிறார். அவர் நமக்கு ஆறுதல் செய்கிறவர் மட்டுமல்ல, அவரே நமக்கு ஆறுதலாகவும் இருக்கிறார்.
அவர் தமது வார்த்தையின் மூலம் ஆறுதல் தருவதோடு மட்டுமல்ல, அந்த வார்த்தையைக் கொண்டே நம்மையும், நமது வாழ்வையும் உயிர்ப்பிக்கிற தேவனாக இருக்கிறார். அவருடைய ஆறுதலை நாம் இருவகையாகப் பார்க்கலாம். முதலாவதாக நமது கசப்பான கடந்தகால நிகழ்வுகளைக் குறித்து நம்முடன் பேசி நமது மனதை ஆற்றித் தேற்றுகிறார். அந்தக் காயங்களை ஆற்றுகிறார். இரண்டாவதாக எதிர்காலத்தைக் குறித்து நமக்கு நம்பிக்கையூட்டி நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
அவர் தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல நமக்கு இரங்கி, நாம் மண்ணென்று நினைவுகூர்ந்து நமக்கு சகாயம் செய்கிறார். (சங்கீதம் 103:13,14) நம்மை மிகவும் மென்மையாகக் கையாளுகிறார். ஒரு தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நம்மைத் தேற்றுகிறார். (ஏசாயா 66:13) அதே நேரத்தில் நமக்குத் தேவையான எச்சரிப்பையும், புத்திமதியையும் தந்து மீண்டும் நாம் ஏற்கனவே விழுந்த பள்ளத்தில் விழாதபடி நமக்கு அறிவூட்டி வழிநடத்துகிறார்.
ஒரு தாயாக, தகப்பனாக, சகோதரனாக, சிநேகிதனாக எந்த கோணத்தில் ஆறுதல் தேவையாய் இருக்கிறதோ அந்த விதத்தில் நம்மோடு இடைபட்டு நம்மை ஆறுதல்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே! நம்மோடு மரண இருளின் பள்ளத்தாக்கிலும் உற்ற துணைவனாக நடந்து வந்து நம்மைவிட்டு விலகாமல் கூட இருக்கிறவர். ஆகவே நாம் எதைக் குறித்தும் அல்லது யாரைக் குறித்தும் அஞ்சத்தேவையில்லை.
நாம் நடக்கிற அதே வேகத்தில் அவரும் நடந்து வருகிறார். இதிலிருந்தே அவர் எவ்வளவாக நம்மைப் புரிந்துவைத்திருக்கிறார் என்பதையும், நம்மிடம் பரிவுகாட்டுகிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முடியும். நாம் பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலும் கிடந்தாலும் நம்மைத் தூக்கியெடுத்து சிகரங்களில் உலவப்பண்ணும் அளவுக்கு அவர் வல்லமையும், அதிகாரமும், உண்மையுமுள்ள தேவனாக இருக்கிறார். அவர் நம்மோடு இருக்கையில் எந்த சோதனைகளும் நம்மை அமிழ்த்த இயலாது. ஆமேன்!
பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/rLlW23lTzSU