ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி – அறிவு

Home » ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி – அறிவு

ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி – அறிவு

தேவபக்தி என்றால் என்ன? தேவனைக் குறித்த சரியான அறிவு இருப்பதன் விளைவாக, தேவன் இடத்தில் பக்தியும், மற்ற மனிதர்கள் இடத்தில் மரியாதையையும், கண்ணியத்தையும் காண்பிப்பதும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் தெய்வீக விழிப்புணர்வோடு வாழ்வதுதான் தேவபக்தி ஆகும்.

தேவபக்தி என்பது ஆவி, ஆத்துமா, சரீரம் அனைத்தோடும் தொடர்புடையது. ஆன்மீகம் என்றால் வெறும் ஆத்துமா சம்பந்தப்பட்டது மட்டுமே என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. கிரேக்கர்கள் முதலாவதாக அப்படிப் பிரித்து வைத்தார்கள். அவர்களுடைய மனநிலை ஆத்துமா சுத்தமாக இருந்தால் போதும், சரீரத்தை எப்படிவேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இருந்தது. அந்த தாக்கம் இன்றுவரை உலகத்தில் தொடர்கிறது. எனவேதான் பவுல் கிரேக்க தேசத்திலிருந்த கொரிந்து பட்டணத்துக்கு எழுதும்போது அப்படிப்பட்ட மனநிலையை களையும்படியான வார்த்தைகளை எழுதி அவர்களுக்கு சரீர பரிசுத்தத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள் என்று பவுல் 1 கொரிந்தியர் 10:31ல் குறிப்பிடுகிறார். அதாவது வாழவேண்டும் என்பதற்காக நாம் எதையெல்லாம் செய்கிறோமோ எல்லாவற்றையும் தேவமகிமைக்காக செய்வதே சரியான தேவபக்தியாகும். வெறும் ஞாயிறு மட்டும் கிறிஸ்துவுக்காக, மற்ற ஆறு நாட்களும் என் சுயத்துக்காக என்று தேவபக்தியுள்ளவர்களால் வாழமுடியாது.

நாம் தேவபக்தியில் வளருவது எப்படி? தேவபக்தி தானாய் வளராது. முள்ளும் குறுக்கும்தான் தானாய் வளரும். தேவபக்தி என்பது முயற்சி செய்து பயிற்சியினால் வளர்க்கப்படும் ஒரு கனிதரும் செடி போன்றது. அதை விதைத்து, நீரூற்றி, பாதுகாத்து வளர்க்க வேண்டும். சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது என்று அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுரை வழங்குகிறார். (1 தீமோத்தேயு 4:7,8)

தேவபக்திகேற்ற முயற்சி செய்வது எப்படி? எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவும் அவ்விஷயத்தில் சிறப்புள்ளவர்களுமாய் இருந்தால் நமக்கு எப்போதும் வேலையில்லாமல் போகாது. வரம் கொடுத்தவர் வாய்ப்பையும் கொடுப்பார், வாய்க்கவும் செய்வார் என்று ஒரு முதிர்ந்த தேவமனிதருடைய கூற்று. தேவபிள்ளைகளாகிய நம்முடைய பிரதான வேலை வார்த்தையில்தான் இருக்கிறது. தேவன் தேவபக்திக்கு ஏதுவான சத்தியத்தை தமது வார்த்தையில்தான் வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே சத்திய வசனத்தைப் படிக்க புரிந்துகொள்ள தியானிக்க நினைவுகூர அது நம்மில் வளருகிறதாய் இருக்கிறது.

இதை செய்யக்கூடாதபடிக்கு சவாலான ஒரு தடை நமக்கு இருக்கிறது. அது எதுவென்றால் வேதத்தில் எழுதப்படாத, நமக்குத் தேவையில்லாத சீர்கேடும், கிழவிகள் பேச்சும் கட்டுக்கதையுமாய் இருக்கிற விஷயங்களின் மீதான ஆவல், நம்மை தேவபக்திக்கேதுவான முயற்சியிலிருந்து திசைதிருப்பி நம்மை திடனற்றுப்போகச் செய்கிறது.

எனவே உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் உள்ள மனிதன் எப்படி ஆரோக்கியமான உணவுவகைகளை ஜாக்கிரதையாக உட்கொள்வானோ அப்படியே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனம், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் கற்றுக்கொண்டு அப்பியாசப்படுத்துவதில் நாம் ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கவேண்டும். (1 தீமோத்தேயு 6:3) கெட்ட சிந்தையுள்ளாவர்களையும், சத்தியமில்லாதவர்களையும், தேவபக்தியை ஆதாயத்தொழிலாக செய்கிறவர்களை விட்டு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சி பண்ணுவதை விட்டுவிடாமல் தொடர வேண்டும். அதற்குத் தேவையான பலனையும், வாய்ப்புகளையும் கர்த்தருடைய ஆவியானவரே நமக்கு ஏற்படுத்தித் தருகிறவராய் இருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/UgR1c3b7JxY

>