ஞானத்தின் ஏழு தூண்கள்- தேவபக்தி -நற்கிரியை

Home » ஞானத்தின் ஏழு தூண்கள்- தேவபக்தி -நற்கிரியை

ஞானத்தின் ஏழு தூண்கள்- தேவபக்தி -நற்கிரியை

நாம் தேவபக்தியுள்ளவர்களா இல்லையா என்பதை எதினால் அறிந்துகொள்ள முடியும்? நமது தேவபக்தி நமது வாழ்வில் நற்கிரியைகளாய் வெள்ப்படும்போது நாம் தேவபக்தியுள்ளவர்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். தேவபக்தியும் நற்கிரியையாகிய பரிசுத்த நடக்கையும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தது.

நற்கிரியையெல்லாம் பரிசுத்த நடக்கையா என்று கேட்போமானால், உலகத்தில் நற்கிரியைகள் செய்கிறவர்கள் அநேகர் உண்டு. ஆனால் தேவசித்தம் எனும் சிறப்பான நற்கிரியையை பரிசுத்தவான்களாகிய நாம் மட்டும்தான் செய்ய முடியும். அதைச் செய்யும்படிதான் நாம் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறோம். தேவன் தனக்கென, தன்னுடைய பயன்பாட்டுக்கென எதையெல்லாம் பிரித்து எடுத்துக்கொள்ளுகிறாரோ அதெல்லாம் பரிசுத்தமானதுதான். அந்தவிதத்தில் பரிசுத்தவான்களாகிய நாம் செய்யும் நற்கிரியை விசேஷமானது.

வைரமும், கல்லும் ஒருவிதத்தில் கற்கள்தான். ஆனால் வைரம் விசேஷமானது, கல் பொதுவானது. பரிசுத்தம் என்பதற்கு எதிரானது என்ன என்று கேட்டால் ‘அசுத்தம்’ என்றுதான் அநேகர் பதில் சொல்வார்கள். ஆனால் பரிசுத்தம் என்ற பதத்துக்கு எதிரானது ‘பொதுவானது (common)’ என்பதேயாகும் (The opposite of Holiness is commonness). எரேமியா 1:5 கூறுகிறபடி நாம் ஒரு விசேஷித்த நோக்கத்துக்காக தாயின் கர்ப்பத்திலேயே பிரித்தெடுக்கப்பட்டவர்கள், உருவாவதற்கு முன்னமே பரிசுத்தமாக்கப்பட்டவர்கள். நாம் எதற்காக பிரித்தெடுக்கப்பட்டோமோ அதற்காக வாழ்வதே பரிசுத்த நடக்கையாகும்.

நற்கிரியைகளை வேதம் அலங்காரம் என்று விளிக்கிறது. அது வேஷமல்ல, அலங்காரம் என்று அழைக்கப்படுவதை நாம் கவனிக்க வேண்டும். நற்கிரியைகள் நிறைந்த வாழ்வு அழியாத, நிலையான அலங்காரமாக இருக்கிறது. அந்த அலங்காரமே நமக்குள் வாசம் செய்யும் தேவனை வெளிப்படுத்துகிறதாயிருக்கிறது. தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் பரிசுத்தத்தின் வெளிப்பாடாக இருக்கிறது என்பதை நாம் தீத்துவுக்கு பவுல் எழுதிய நிருபத்தின் 2:11-13 வசனங்களில் அறிந்துகொள்ளாலாம்.

தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும் என்று 1 தீமோத்தேயு 2:10 பெண்களுக்கு ஆலோசனை சொல்லுகிறது. ஆண்களாயிருந்தாலும், பெண்களாயிருந்தாலும் நற்கிரியையே அவர்களுக்கு சிறப்பான அலங்காரமாகும்.

யோசேப்பு, தானியேல், மொர்த்தேகாய் போன்ற தேவபுருஷர்கள் இப்படிப்பட்ட நற்கிரியைகளால் தங்களை அலங்கரித்துக்கொண்டு, அதன் விளைவாக தேவன் தரும் நற்பலனை அனுபவித்து நமக்கு முன்பாக சாட்சிகளாய் இருக்கிறார்கள். ஆம் பிரியமானவர்களே! நமது நற்கிரியைகளின் மூலமாக நம்முடைய ஜீவனுள்ள தேவனை இந்த கோணலும் மாறுபாடுமுள்ள உலகத்தில் வெளிப்படுத்துவோமாக! கர்த்தத்தாமே அதற்குத் தேவையான கிருபையையும், பெலனையும் தமது வார்த்தையின் மூலமாக நமக்குத் தருகிறவராக இருக்கிறார்.

பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/hzD2qkQr4vQ

>