பலன் அளிப்பவர் – ஆறுதல், ஆட்கள்

Home » பலன் அளிப்பவர் – ஆறுதல், ஆட்கள்

பலன் அளிப்பவர் – ஆறுதல், ஆட்கள்

மகாப் பெரிய விசுவாச வீரர்கள் என நாம் கருதும் வேதாகமப் புருஷர்கள்கூட சோர்ந்து போய் ஆறுதலுக்காக ஏங்கிய சம்பவங்களை நாம் வேதாகமத்தில் பார்க்க முடியும். கரடியையும், சிங்கத்தையும், கோலியாத்தையும், ஆயிரம் பெலிஸ்தியர்களையும் வீழ்த்திய தாவீதும், 450 பாகால் தீர்க்கதரிசிகளை சவால்விட்டு வென்ற மாபெரும் தீர்க்கதரிசியாகிய எலியாவும், உலகத்தைக் கலக்கிய அப்போஸ்தலனாகிய பவுலும்கூட அதற்கு விதிவிலக்கில்லை.

நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார் (2 கொரிந்தியர் 7:5,6) என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுகிறார்.

நான் மிகுதியும் வருத்தப்பட்டேன். எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன் என்று தாவீது புலம்புகிறார். அப்படி உதவியற்றவனாய் தாவீது தன்னை உணர்ந்தபோதிலும்கூட கர்த்தர் அவனுக்கு ஆறுதலாக யோனத்தானை காட்டுக்கு அனுப்பி தாவீதின் கைகளை அவன் கர்த்தருக்குள் திடப்படுத்தும்படி அருள் செய்தார். (1 சாமுவேல் 23:16)

சூழ்நிலைகள் நமக்கு எதிராக மாறும்பொழுது நமது மனம் கலக்கமடைகிறது, அந்த கலக்கமடைந்த மனதுடன் சூழ்நிலையைப் பார்க்கும்பொழுது அந்தக் கலக்கம் இன்னும் தீவிரமடைகிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒரு மனிதனுக்கு இன்னொருவரின் ஆறுதல் தேவையாக இருக்கிறது. தேவன் சரியான நேரத்தில் சரியான நபர்களை நம்மிடம் அனுப்புகிறார். அவர் நமது மனதையும் ஆறுதல்படுத்தி, சூழ்நிலைகளையும் மாற்றுகிற அற்புதமான தேவனாக இருக்கிறார்.

நம்முடைய விண்ணப்பத்தைக் கேட்டு நமக்கு உதவி செய்கிற அதே தேவன்தான் மற்றவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டு நம்மைக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்கிறவராகவும் இருக்கிறார். நாம் மற்றவர்களை ஆறுதல்படுத்தும்படிதான் தேவன் நம்மை ஆறுதல்படுத்துகிறவராக இருக்கிறார். எனவேதான் வேதம் கர்த்தரை சகல ஆறுதலில் தேவன் என்று அழைக்கிறது. இவ்வுலகில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நான் ஏன் ஆசீர்வதிக்கப்பட்டேன் என்பதைப் புரிந்தவர்கள் என இருவகையினர் உண்டு என்பார்கள். ஆம், நாம் ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி அழைக்கப்பட்டவர்கள். வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்கியமல்லவா?. (அப்போஸ்தலர் 20:35)

நாம் செய்யவேண்டியதெல்லாம் ஆறுதலின் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டியதே. தேவன் நம்மை ஆறுதல்படுத்த ஆட்களை அனுப்புகிறவர் என்பது உண்மைதான். ஆனால் நாம் தேவனைவிட்டு அந்த ஆட்கள் வசமாய் சாய்ந்துவிடாதபடி எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அதாவது தேவன் மீது மாத்திரமே நம்பிக்கையும், மனிதர்கள் மீது அன்புமுள்ளவர்களாய் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மை ஆறுதல்படுத்தும்படி தேவன் நம்மிடம் அனுப்பும் ஆட்களை அடையாளம் கண்டுகொள்ளும் பகுத்தறிவு உடையவர்களாக நாம் இருக்க வேண்டும். கர்த்தர்தாமே நம்மை ஆறுதல்படுத்து ஆசீர்வதித்து, நம்மையும் மற்றவர்களை ஆறுதல்படுத்தும் பாத்திரங்களாகப் பயன்படுத்துவாராக!.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/_pre5ar0vMs

>