பலன் அளிக்கிறவர்: ஆறுதல்…மறுகட்டமைப்பு

Home » பலன் அளிக்கிறவர்: ஆறுதல்…மறுகட்டமைப்பு

பலன் அளிக்கிறவர்: ஆறுதல்…மறுகட்டமைப்பு

நாம் துக்கமாய் இருக்கும் நேரங்களில் அநேக நண்பர்கள் உறவினர்கள் வருவார்கள் நம்மைத் தட்டிக்கொடுத்து ஆறுதல் செய்வார்கள், சிலர் நம்மைக் கட்டியணைத்துத் தேற்றுவார்கள். அப்படிப்பட்ட உறவுகளையும், நட்புக்களையும் பெற்றிருப்பது நல்லதுதான். ஆனாலும் மனிதர்கள் நமக்குக் கொடுக்கும் ஆறுதல் பூரணமானது அல்ல. ஆறுதலில் தேவன் என்று வேதத்தில் அழைக்கப்படும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்முடைய வாழ்வில் இடைப்படும்பொழுது அவர் தட்டிக்கொடுக்கவும் செய்கிறார், கட்டியணைக்கவும் செய்கிறார் அதோடு நிறுத்தாமல் அவர் நம்முடைய வாழ்வை கட்டியெழுப்புகிறவராகவும் இருக்கிறார்.

ஆறுதல் செய்து, மறுகட்டமைப்பு செய்வது அவருக்குப் புதிதல்ல. ஆதியாகமம் முதல் அதிகாரத்திலேயே அவர் அதைச் செய்ததை நாம் வாசிக்கமுடியும். ஒழுங்கின்மையும், வெறுமையும், இருள் சூழ்ந்ததுமான இந்த உலகத்தை அவர் மறுகட்டமைப்பு செய்ததை நாம் பார்க்கமுடியும். அதுமட்டுமல்லாமல் ஏராளமான வேதாகமப் புருஷர்களின் வாழ்வில் செய்திருக்கிறார். நம்மைச் சுற்றியிருக்கும் அநேக சகோதர சகோதரிகளின் வாழ்விலும், நம் வாழிவிலும் இன்றுவரை செய்துகொண்டேதான் இருக்கிறார்.

அவர் அளிக்கும் ஆறுதல் எப்படிப்பட்டது? எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். என்று ஏசாயா 52:9 சொல்லுகிறது. ஆம், மீட்புதான் சிறப்பான ஆறுதல். தேவன் ஆறுதல்செய்து மீட்டுக்கொண்டு அதன் பின்னரே மறுகட்டமைப்பு செய்யத் தொடங்குகிறார். மீட்பு என்பது இம்மைக்கும் மறுமைக்கும் உரியது. அந்த மீட்பின் ஆசீர்வாதத்தின் முன்ருசியை இம்மையிலும். முழுருசியை மறுமையிலும் நாம் பெற்று அனுபவிக்க முடியும். தேவன் மீட்பு நிரந்தரமானது. அவர் ஒருமுறை மீட்டுக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மறுமுறை அதே குழியில் விழுந்துவிடாமலும் நம்மை பாதுகாக்கிறவராக இருக்கிறார்.

தேவன் தரும் தெய்வீக ஆறுதலும், மறுகட்டமைப்பும் தெய்வீக முறைமையில்தான் வரும். அதற்கென்று ஒரு படிநிலைகள் உள்ளன. அந்தப் படிநிலைகளில் படிப்படியாகத்தான் தேவன் நம்மை அழைத்துச் செல்கிறார். அது துரிதமாகவோ அல்லது குறுக்கு வழியிலோ வருவதில்லை. அதை முழுவதுமாக பெற்று அனுபவிக்க நாம் பொறுமையுடன் தேவனுடைய கரம் பிடித்து முன்னேறவேண்டும்.

அடுத்ததாக, தேவன் நம்மை மறுகட்டமைக்க மனிதர்களைப் பயன்படுத்துகிறவராக இருக்கிறார். எனவே நாம் எந்த மனிதர்களையும் அற்பமாக எண்ணிப் புறக்கணிக்கக்கூடாது. பக்தனாகிய யோபுவின் வாழ்வை தேவன் மறுகட்டமைக்க அவன் சகோதர, சகோதரிகளையும், அவனுக்கு அறிமுகமான மனிதர்களையும் பயன்படுத்தினார். அவர்களைக் கொண்டு நம்மை ஆசீர்வதிப்பதன் மூலம் அவர்கள் வாழ்விலும் ஆசீர்வாதக் கணக்கை துவக்கி வைப்பதே தேவனுடைய திட்டம்.

சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார் என்று கர்த்தராகிய கிறிஸ்துவைக் குறித்து ஏசாயா 61:3 தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறது. ஆம், தேவன் நம்மை மூழ்கடிக்கும் ஒன்றுக்குப் பதிலாக, உயரத்தூக்கி எடுக்கும் இன்னொன்றைக் கொடுத்து நம்மை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, சிறப்படையச் செய்கிற தேவனாக இருக்கிறார். அவர் தரும் ஆறுதலே நிரந்தரமான ஆறுதல், அந்த ஆறுதல் நம்மைக் கட்டியணைப்பதாக மட்டுமின்றி கட்டியெழுப்புவதாகவும் உள்ளது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/wiyv9vBAnZY

>