இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும் என்று கர்த்தர் சொன்னதாக எசேக்கியேல் 36:37 பதிவு செய்துவைத்திருக்கிறது. அவர்கள் என்னிடத்தில் கெஞ்சிக் கூத்தாட வேண்டும் என்ற அர்த்தத்தில் இது சொல்லப்படாமல், அவர்கள் என்னிடம் பேசட்டும், நான் அவர்களுக்கு சொல்லித்தருவேன் என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏன் நம்மை விண்ணப்பம் பண்ணும்படியாக தேவன் சொல்லுகிறார் என்றால் நாம் விண்ணப்பம் பண்ணும்போது தேவதிட்டத்தைக் குறித்து அறிந்து கொள்ளுகிறோம். அறிந்த அந்தத் திட்டத்தை அறிக்கையாக மாற்றிக்கொள்ளுகிறோம். அவன் என்னை ஆசீர்வதிப்பேன் என்று சொல்வாரானால், நான் ஆசீர்வாதமாக இருப்பேன் என்பது எனது அறிக்கையாக மாறிவிடும்.
தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை என்று 1 கொரிந்தியர் 2:9 சொல்லுகிறது. இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான வார்த்தை “ஆயத்தம் பண்ணினவைகள்” என்பதாகும். தேவன் எதையும் முன் யோசனையுடன் செய்யக்கூடியவர். அவர் ஏற்கனவே எனக்காக சகலத்தையும் ஆயத்தம் செய்து வைத்திருக்கிறார். இந்த அறிவு நமக்கு சமாதானத்தையும், தைரியத்தையும் தரும். திட்டத்தை வைத்திருக்கிறவர் பேசுகிற தேவனாக இருக்கிறார். ஆயத்தம் பண்ணினவர் அதை அறிவிக்கிறவராக இருக்கிறார்.
அவர் அதை நமக்கு எப்படி அறிவிக்கிறார் என்றால் பரிசுத்த ஆவியானவர் மூலம் அறிவிக்கிறார். நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார் என்று 1 கொரிந்தியர் 2:10 சொல்லுகிறது. ஆவியானவர் நமக்கு அவைகளை அறிவிக்கிறவரும், நினைப்பூட்டுகிறவரும் மட்டுமல்ல, அவர் நமக்காக அருளப்பட்டவரும்கூட. அவர் நம்முள் இருக்கிறவர். நாம் உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் நமக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றிருக்கிறோம்.
அந்த பரிசுத்த ஆவியானவர் நமது ஆவிக்குரிய உண்மை நிலையை அறிந்தவராகையால் அவர் அந்த ஆவிக்குரிய உண்மை நிலையாகிய ஆசீர்வாதம் நமது அனுபவமாக மாறும்படி கர்த்தருடைய வார்த்தைகளை நமக்கு போதிக்கிறார். எபேசியர் 1:3 சொல்லுகிறபடி பிதாவாகிய தேவனானவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் என்பதே நம்மைக்குறித்த ஆவிக்குரிய உண்மை நிலையாகும். ஆம், நாம் அவரோடே கூட உன்னதங்களில் அமரவைக்கப்பட்டிருக்கிறோம். இந்த ஆவிக்குரிய உண்மை நிலையானது, பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவ வார்த்தையினால் நமது அனுபவமாக மாறுவதாக.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ErXf60Sq2d4