தேவபக்தி – இரட்சிப்பு

Home » தேவபக்தி – இரட்சிப்பு

தேவபக்தி – இரட்சிப்பு

கர்த்தருடைய வார்த்தையைக் குறித்து சங்கீதக்காரன் சொல்லும்பொழுது அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது என்று சொல்லிவிட்டு, அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு என்று சொல்லுகிறார். (சங்கீதம் 19:10,11)

கர்த்தருடைய வார்த்தை நம்மை தேற்றுவதும், உற்சாகப்படுத்துவதும் மட்டுமல்ல எச்சரிக்கவும், பிழைகளைக் கண்டித்து உணர்த்தவும் செய்கிறது. அது நம்மை எச்சரிப்பதன் பலன் என்னவென்றால் அதன்மூலம் நாம் துணிகரமான பாவங்களுக்கும், பெரும்பாதகத்துக்கு நீங்கலாக்கிக் காக்கப்படுவோம். (சங்கீதம் 19:13) தேவன் நம்மீது வைத்த அன்பு மற்றும் அக்கறையின் விளைவாகத்தான் தீங்கை முன்கண்டு நம்மை எச்சரிக்கிறார்.

அப்போஸ்தலனாகிய பவுலும் தான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் வரும் எனவே ஜாக்கிரதையாய் இருங்கள் என்று சபையை எச்சரிக்கிறார். எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்காக ஜெபித்து அவர்களை தேவனுடைய பாதுகாக்கும் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறார்.

வேதம் நம்மை எச்சரிப்பதன் நோக்கம் நம்மை பயமுறுத்துவது அல்ல, பயபக்தியுள்ளவர்களாக மாற்றி, தீங்கிலிருந்து நம்மைத் தப்புவிப்பதற்கே ஆகும். பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தண்டிக்கப்பட்டதைக் கண்டும் மனம்திரும்பாத பெல்தாத்ஷார் எனும் ராஜாவையும். கர்த்தர் முன்கூட்டியே சொல்லியும் பிசாசு உள்ளே புகுந்து கர்த்தரைக் காட்டிக்கொடுக்கும்வரை கடினப்பட்டிருந்த யூதாஸ்காரியோத்தையும் நினைத்துப் பார்ப்போமாக.

இப்படி பலரும் வீழ்ந்துபோகக் காரணம் அவர்கள் தேவனை தங்கள் வாழ்வின் மையமாகக் கொள்ளாமல் தங்களையே மையமாகக் கொண்ட வாழ்வு வாழ்ந்ததே ஆகும். வாழ்வின் மையமாக தேவன் இருந்தால் இருக்க வேண்டியவை எல்லாம் அதனதன் இடத்தில் இருக்கும்.

தேவனுடைய எச்சரிப்புக்குப் பின்பாக அவருடைய கிருபை உள்ளது. பக்தனாகிய நோவாவுக்கு தேவனுடைய கிருபை கிடைத்ததால்தான் அவன் தேவ எச்சரிப்பைப் பெற்றான். தேவ எச்சரிப்பைப் பெற்றவுடன் பயபக்தியுள்ளவனாகி, தேவனுக்குக் கீழ்ப்படிந்து விரைந்து செயலில் இறங்கி தன்னையும் தன் குடும்பத்தையும் காத்துக்கொண்ட முன்மாதிரியைப் பின்பற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/bBLsUuDf79I

>