தேவபக்தி – போதனை

Home » தேவபக்தி – போதனை

தேவபக்தி – போதனை

நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான் என்று ஆதியாகமம் 6:9 சொல்லுகிறது. தேவனோடு சஞ்சரித்தல் என்பதற்கு தேவன் என்னோடிருக்கிறார் என்ற விழிப்புணர்வோடிருத்தல் என்று அர்த்தமாகும். பூமியில் எத்தனையோ லட்சம் பேர் வாழ்ந்த அக்காலத்தில் நோவாவுக்கு மட்டும் அந்த சிலாக்கியம் கிடைத்தது எப்படி? அதற்கான பதிலை முந்தைய வசனத்தில் பார்க்கலாம். “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது”. (ஆதியாகமம் 6:8)

நோவா நீதிமானாக வாழ்ந்ததினால் அவருக்கு தேவ கிருபை கிடைத்ததாக வேதம் சொல்லவில்லை. நோவாவுக்கு தேவன் காட்டிய கிருபையே அவரை நீதிமானாக வாழவைத்தது என்பது தான் சத்தியம். நோவாவின் காலத்தைப் போலவே மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும் என்று கர்த்தர் லூக்கா 17: 26,27ல் முன்னறிவித்திருக்கிறார். நோவாவின் நாட்களைப் போலவே இந்நாட்களிலும் ஜனங்களுடைய இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடைந்து அவர்கள் உணர்வில்லாதவர்களாகவும், தேவனை மையப்படுத்தாமல் தன்னை மையப்படுத்தி வாழ்பவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட சந்ததியின் மத்தியில் தேவன் நம்மை தமது கிருபையைக் கொண்டு இரட்சித்து, அவரை மையமாகக் கொண்டு வாழும்படி அழைத்திருக்கிறார்.

நாம் இக்காலத்து நோவாக்களாக இருக்கிறோம். நோவாவுக்கு கிருபை தந்த தேவன் நமக்கும் கிருபை தந்திருக்கிறார். நாம் பாவம் செய்ய முயலும்போது மனசாட்சி மூலம் நம்மோடு இடைப்படுகிறார். அவர் தந்த கிருபையானது நமக்கு போதிக்கிறது. எதையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க வேண்டும், எதையெல்லாம் விலகிப் போவதன் மூலம் ஜெயிக்க வேண்டும் என்று போதிக்கிறது. கிருபையானது தேவனுடைய வார்த்தையை நமக்கு போதிப்பதன் மூலம் நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது.

உன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய் என்று பவுல் தீமோத்தேயுவுக்கு ஆலோசனை சொல்லுகிறார். (1 தீமோத்தேயு 4:16) ஆம், நாம் உபதேசத்தில் நிலைகொண்டிருக்கும் போது நம்மையும், நம்முடன் சேர்ந்து தேவ வசனத்தைக் கேட்ட மற்றவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவோம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/yH_5dp0VqSQ

>