பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிதாவை நோக்கி சொல்லுவதை நாம் யோவான் 17:4 இல் வாசிக்கலாம். கர்த்தராகிய இயேசு எதற்காக பூமிக்கு வந்தாரோ அதை நிறைவேற்றி முடிப்பதில் வெகு ஜாக்கிரதையாக இருந்ததை அவரது வாழ்க்கைச் சரிதை மூலமாக நாம் அறிந்துகொள்ளலாம். அப்படிப்பட்ட உன்னத வாழ்க்கைக்கு அவரை ஆயத்தப்படுத்தியது எது? அதற்கான பதில் அதற்கு முந்தைய வசனத்தில் இருக்கிறது.
உண்டாக்கினவரை அறிவதன் மூலமாகத்தான் உண்டாக்கப்பட்டதன் நோக்கத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். உயிர் கொடுத்தவரை அறிவதே உயிர்வாழ்வதன் உயர் நோக்கமாக இருக்கிறது. உண்டாக்கப்பட்டதன் நோக்கத்தை அறியாமலும், அதை எப்படி அறிந்துகொள்வது என்று தெரியாமலும் மனுக்குலம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. என்னை ஏன் பெற்றாய்? என்று உங்கள் தாய் தகப்பனிடத்தில் கேட்காதீர்கள், என்னிடத்தில் வந்து கேளுங்கள். நான் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று நம்மை உண்டாக்கின கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 45:10,11)
எனக்காக ஜீவனைக் கொடுத்த என் இயேசுவுக்காக நான் எதையாவது செய்ய வேண்டும் என்று பலர் சொல்லுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அவர்களது எண்ணம் நல்லதுதான், ஆனால் எதையாவது செய்ய அல்ல, நம்மை எதற்காக தேவன் முன்குறித்தாரோ அதை நிறைவேற்றி முடிப்பதற்குத்தான் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதுதான் தேவனுக்கு மகிமையும், பரிசுத்த வாழ்க்கைக்கு ஆதாரமுமாக இருக்கிறது. அதுவே நமது வாழ்க்கையில் நாம் ருசிக்க வேண்டிய மாபெரும் அற்புதமாகவும் இருக்கிறது.
நாம் எதை செய்து நிறைவேற்ற வேண்டுமோ அதை தேவன் முன்னதாகவே ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். அதை எப்படி செய்து முடிக்கவேண்டும் என்பதற்கான வழிநடத்துதல் அவரிடம் மட்டுமே நமக்குக் கிடைக்கிறது. எனவெ இந்தப் பணியை அவரது பாதத்தில் அமர்ந்து அவரது வார்த்தையைக் கேட்பது என்ற புள்ளியிலிருந்துதான் தொடங்க வேண்டும். இதைத்தான் லாசருவின் சகோதரியாகிய மரியாள் செய்து “தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்று கர்த்தராகிய இயேசுவின் பாராட்டைப் பெற்றாள்.
முதலிடம் தேவனுக்கு என்பதுதான் சரியான வரிசைமுறை, இந்த வரிசைமுறை சரியாக இருந்தால் நமது வாழ்க்கைமுறையும் சரியாக இருக்கும். எனவே கிறிஸ்துவின் பாதத்தில் அமர்ந்து அவரது வார்த்தையில் தொடங்குங்கள், உங்கள் வாழ்க்கையையே மாற்றியமைக்க அவர் போதுமானவராக இருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/nKFLVOdnzX0