தேவனே நமக்கு ஞானத்தை அருளுகிறவர் என்று யாக்கோபு 1:5 சொல்லுகிறது. நாம் அறிந்தவைகளைப் புரிந்துகொண்டு அதை செயல்படுத்த நமக்கு ஞானம் அவசியமாக இருக்கிறது. நமது கர்த்தராகிய தேவன் தேவசித்தம் செய்வதற்காக தெய்வீக ஞானத்தை நமக்கு அருளுகிறவராக இருக்கிறார். அவர் அருளும் ஞானமானது இந்த உலகஞானத்தைப்போல தந்திரமானதாக இராமல், சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. (யாக்கோபு 3:15)
வார்த்தையாகிய கிறிஸ்துவே நமக்கு ஞானமாக இருக்கிறார் என்று 1 கொரிந்தியர் 1:31 சொல்லுகிறது. ஆம், தேவனுடைய ஞானம் அவருடைய வார்த்தைதான். அந்த வார்த்தையானது நமது சிந்தையை சீராக்கி, சரியான உணர்ச்சிகளைக் கொடுத்து, சிறப்பான தீர்மானங்கள் எடுக்க நமக்கு உதவி செய்கிறது. கர்த்தருடைய வார்த்தை நம் ஆத்துமாவை உயிர்ப்பித்து, பேதையை ஞானியாக்குகிறது.
தேவன் நமக்கு எப்படி ஞானத்தை அருளுகிறார் என்று 2 தீமோத்தேயு 3:14,15 வசனங்கள் நமக்கு போதிக்கின்றன. இரட்சிப்புக்கேற்ற ஞானத்தை வேதவசனம் நமக்கு போதிப்பதாக அந்த வேதப்பகுதி சொல்லுகிறது. இங்கு ஏன் வசனம் ஞானத்தையும், இரட்சிப்பையும் தொடர்புபடுத்துகிறதென்றால் ஆசீர்வாதங்களின் ஒட்டுமொத்த விதைவடிவமே இரட்சிப்பாகும். இரட்சிப்பு இருந்தால் எல்லாம் இருக்கிறது. அந்த இரட்சிப்புக்குள் வசனமே நம்மை நடத்துகிறது.
ஞானமாகிய கிறிஸ்து நமக்குள்ளிருந்து சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை நமக்குப் பொருத்திக்காட்டி, விளக்கம் தந்து நமக்குப் போதித்து, நம்மை நடத்துகிறார். இப்படிப்பட்ட வாழ்வுதான் கன்மலையின்மேல் கட்டப்பட்ட வீட்டுக்கு ஒப்பானதாக இருக்கிறது. அந்த வீடு எப்பேற்பட்ட கோரப்புயலுக்கும், பேரலைக்கும் ஈடு கொடுத்து, விழ மறுத்து, கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும்.
எனவே கர்த்தரை நம்பி, அவருடைய ஞானமாகிய வசனத்தைப் பற்றிக்கொண்டு, தேவசித்ததை செய்வதற்காகவே நமக்கு அருளப்பட்ட தெய்வீக ஞானத்தின்படி, அந்த ஞானத்தை செயல்படுத்துவதற்காகவே நமக்கு அருளப்பட்ட கிருபையில் நின்று, தேவசித்தத்தை செய்து முடிப்போமாக!.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/MCd555l_9r4