சகோதர சிநேகம் : ஆவிக்குரியவர்கள்-1

Home » சகோதர சிநேகம் : ஆவிக்குரியவர்கள்-1

சகோதர சிநேகம் : ஆவிக்குரியவர்கள்-1

சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள் என்று கலாத்தியர் 6:1 சொல்லுகிறது. இதில் ‘ஆவிக்குரியவர்களாகிய நீங்கள்’ என்ற வார்த்தை மற்றவர்களிலிருந்து நம்மை வேறுபிரித்து, விசேஷப்படுத்திக் காண்பிக்கிறது. ஆவிக்குரியவர்கள் என்றால் என்ன? அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை சற்று ஆராய்வோம்.

பிசாசு ஒரு மனிதனைப் பிடிக்கும்போது அவனைக் கட்டுப்படுத்துவான். ஆனால் ஆவியானவரோ யாரையும் கட்டுப்படுத்துபவரோ, அடக்குமுறை செய்பவரோ அல்ல. அவர் ஆட்கொள்ளுபவர், யார் தமக்கு தன்னை விட்டுக்கொடுக்கிறார்களோ அவர்களை கண்ணியமான முறையில் ஆளுகை செய்கிறவர். தனக்கு செவிகொடுக்கிறவர்களுக்கு உணர்வைக் கொடுத்து, எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, செய்ய வேண்டிய காரியங்களை நன்றாகப் புரிந்துகொண்டு, முழு சித்தத்துடன் செய்யும்படியாக பழக்குவிப்பவரே ஆவியானவர். அப்படிப்பட்டவர்களே ஆவிக்குரியவர்கள்!

ஆவிக்குரியவர்கள் தங்கள் மனதை ஆவிக்குரிய விஷயங்களையே சிந்திக்கிறதற்கு பழக்குவித்திருக்கிறார்கள். அதையே வாழ்க்கைமுறையாக வைத்திருக்கிறார்கள். எந்த விஷயத்தையும் இந்த சிந்தையினூடாகத்தான் பார்க்கிறார்கள். இது ஒரு மனிதனால் தானாக வருவித்துக்கொள்ளக்கூடிய செயலல்ல, இது முழுக்க முழுக்க தேவன் தரும் கிருபை.

இந்த நிலையை அடைய நாம் முதலாவது தேவனோடு உறவாட, உரையாட வேண்டும். அவர் நம்மிடம் திரும்பப் பேசி நமக்குக் கற்றுக்கொடுப்பார். தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் நம்முடைய சிந்தையையும், இருதயத்தையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். அதன்பின்னர் கவலைகளும் பயங்களும் முற்றிலும் நீங்கி, தேவ சமாதானம் நம்முடைய இருதயத்தை ஆளுகை செய்யத் தொடங்கும். இந்த நிலையை அடைந்தபின்னர் உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருக்க நம் மனம் தானாகப் பழக்கப்பட்டுவிடும். நாம் இந்த நிலையை எய்த வேண்டுமென்றுதான் தேவன் விரும்புகிறார்.

இப்படிப்பட்ட நிலையை எய்திய ஆவிக்குரியவர்களிடமிருந்து ஆவிக்குரிய செயல்கள் தானாக வெளிப்படும். ஒவ்வொரு காரியத்துக்கும் அவர்கள் ஆற்றும் எதிர்வினையும் ஆவிக்குரிய விதத்தில்தான் இருக்கும். அதுமட்டுமல்ல, அவர்கள் ஆவிக்குரிய செயலூக்கமுள்ளவர்களாக இருப்பார்கள். அதாவது ஒரு காரியம் நடைபெறவேண்டும் என்று காத்திராமல் அதை நடப்பிக்கக்கூடிய செயலைச் முன்கூட்டியே செய்கிறவர்களாக இருப்பார்கள். அதாவது தன்னை துன்பப்படுத்தினவர்கள் தங்கள் குற்றத்தை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் முன்னரே அவர்களுடைய மன்னிப்புக்காக பிதாவிடம் மன்றாடிய கர்த்தராகிய இயேசுவின் செயலை இதற்கு ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

நம்மிடமும் அப்படிப்பட்ட கனிகள் வெளிப்பட, நாமும் ஆவிக்குரியவர்களாக இந்த பூமியில் கர்த்தருக்கு சாட்சியாக வாழ தேவன்தாமே கிருபை செய்வாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/rKf8QpuFXn8

>