பலன் அளிக்கிறவர் – பலவீனத்தில் பலன்

Home » பலன் அளிக்கிறவர் – பலவீனத்தில் பலன்

பலன் அளிக்கிறவர் – பலவீனத்தில் பலன்

எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை என்று யாக்கோபு 5:17 சொல்லுகிறது. இதில் எலியா நம்மைப்போல பாடுள்ள மனுஷனாய் இருந்தும் என்ற வார்த்தையை முக்கியப்படுத்த விரும்புகிறேன். எலியா நம்மைப்போல பாடுள்ள மனுஷனாக இருந்தும் அவன் ஜெபித்த ஜெபத்தை கர்த்தர் கேட்டு பதிலளித்திருப்பாரென்றால் நம்முடைய ஜெபங்களுக்கும் நிச்சயம் பதில் உண்டு.

தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் வித்தியாசமானது. இந்த உலகம் இனத்தையும் நிறத்தையும் பணத்தையும் முக்கியப் படுத்தும். நம்முடைய தேவனோ அழைத்த அழைப்பை முக்கியப் படுத்துகிற தேவனாய் இருக்கிறார். அவர் இந்த உலகத்தால் நிராகரிக்கப்பட்ட எளிமையானவர்களைத் தெரிந்துகொண்டு அவர்களைக் கொண்டு அரிய காரியங்களை செய்து முடிக்கிறவர். எளிமையானவர்களையும், புறக்கணிக்கப் பட்டவர்களையும், பெலவீனர்களையும் தெரிந்துகொண்டு அவர்களால் செய்ய முடியாததை அவர்களைக் கொண்டே செய்து முடிப்பதில் தான் தேவன் மகிமைப்படுகிறார்.

கர்த்தராகிய இயேசுவின் சீஷர்கள் பலமுறை தங்கள் அவிசுவாசத்தின் நிமித்தமும், பயத்தின் நிமித்தமும் கர்த்தரால் கடிந்துகொள்ளப்பட்டார்கள். அவர்களைக் கடிந்துகொண்டாலும், புறக்கணித்துவிடாமல் அவர்கள் ஒவ்வொருவரையும் அற்புதமான சாட்சிகளாக உருவாக்கி உலகுக்குக் காட்டியவர்தான் நம்முடைய ஆண்டவர்!

பயம் வருவது மனிதருக்கு இயல்புதான். ஆனாலும் கர்த்தரே தம்முடைய பிள்ளைகளுக்கு சரியான விதத்தில் பயத்தை கையாள சொல்லித்தருகிறார். எந்த காரியத்தில் பயம் இருக்கிறதோ அந்தக் காரியத்தைக் குறித்து கர்த்தர் என்ன சொல்லியிருக்கிறாரோ அதை அறிக்கை செய்வதன்மூலம் நாம் பயத்தையும் வென்று, பயத்துக்குக் காரணமான பிரச்சனையையும் வெல்லமுடியும். நாம் பெலவீனர் என்பது உண்மைதான், ஆனால் அவர் பெலப்படுத்துகிறார் என்பது சத்தியம் ஆகையால் அந்த பெலவீனம் அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் என்ற நிச்சயம் நமக்கு உண்டு.

நாம் சத்தியத்தின்மீது கவனம் வைத்திருக்கும்போது நாம் சிந்திக்கக்கூடியவர்களாக இருப்போம். சிந்தனையும் உணர்வும் உள்ளவனுக்கு இருதயக்கடினம் இருக்காது. அந்த இருதயக்கடினம்தான் அநேக நேரங்களில் நமக்கு சந்தேகத்தையும், பயத்தையும் கொண்டுவருகிறது.

நாம் சத்தியத்தின்மீது கவனம் வைத்திருக்கும்போது கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அது நம்மைவிட்டு எடுபடுவதும் இல்லை, விலகுவதுமில்லை என்பதில் உறுதியாக இருப்போம். அந்தக் கிருபையின் மேல் நம்பிக்கை வைத்து, அவரை விசுவாசிக்கும்போது அவர் தம்முடைய மகிமையை வெளிப்படுத்துவார், அப்போது நம்முடைய குறைவுகளெல்லாம் நிறைவாகும்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/A9rjzEvveqY

>