சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்-2

Home » சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்-2

சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்-2

தீர்க்கதரிசியாகிய சாமுவேலை கர்த்தர் ஈசாயின் குமாரரில் ஒருவனை ராஜாவாக அபிஷேகம் பண்ணும்படி பெத்லகேமுக்கு அனுப்புகிறார். அங்கு செல்லும் சாமுவேல் ஈசாயின் குமாரனாகிய எலியாபைப் பார்த்ததும் அவன் முகத்தையும், சரீர வளர்ச்சியையும் கண்டு இவன்தான் கர்த்தர் ராஜாவாகத் தெரிந்துகொண்ட மனிதன் என்று எண்ணுகிறார். ஆனால் உடனடியாக கர்த்தர் சாமுவேலுக்குள் இருந்து பேசுகிறார். நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்க வேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7) என்று அவர் சொன்னவுடன் சாமுவேல் சுதாரித்துக்கொண்டு, தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சரியான மனிதனாகிய தாவீதைக் கண்டுபிடித்து அவனை அபிஷேகம் பண்ணுகிறார்.

இதைத்தான் ஆவிக்குரிய நிதானித்தல் என்கிறோம். ஆவிக்குரியவன் மனுஷன் பார்க்கிறவிதமாகப் பார்க்க மாட்டான். அவன் ஒரு காரியத்தை தேவன் எந்த கோணத்தில் பார்ப்பாரோ அதே கோணத்தில் பார்ப்பதற்கு பழக்குவிக்கப்பட்டவன். ஆவிக்குரியவன் அவசரப்படவுமாட்டான், பதறவும் மாட்டான். அவன் எல்லாவற்றையும் ஆவியானவர் துணைகொண்டு நிதானித்து தீர்மானம் செய்யும் சுபாவத்தை தன்னுள் வளர்த்துக்கொண்டவனாக இருக்கிறான். இத்தகைய ஆவிக்குரிய நிதானம் பரிசுத்த ஆவியானவரின் துணையோடுதான் வரும். அவரே நமக்கு வெளிச்சத்தையும் வெளிப்பாடுகளையும் கொடுக்கிறவர்.

சூரியனுக்குக் கீழே இந்த உலகம் ஒரு கட்டமைப்பின்படி(system) இயங்கிக்கொண்டிருக்கிறது. அதற்கு உட்பட்டுத்தான் இங்கே மனிதர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் ஆவிக்குரியவனோ அந்தக் கட்டமைப்புக்கு வெளியே போய் சிந்திக்கக்கூடியவனாக இருக்கிறான். இது அந்தக் கட்டமைப்புக்குள் சிறைப்பட்ட மனிதருக்கு பைத்தியமாகத்தான் தோன்றும். ஆனால் இதுதான் தேவ ஞானமாக இருக்கிறது. ஆவிக்குரியவன் இந்த உலகத்தின் ஞானத்தை நஷ்டமென்றும், குப்பையென்றும் எண்ணுவான்.

சூரியனுக்குக் கீழே உலகத்தின் கட்டமைப்புக்குள் சுழலும் மனிதர்களின் சிந்தனை ஒரு வரம்புக்கும் எல்லைக்கும் உட்பட்டது. ஆனால் ஆவிக்குரியவனின் சிந்தையோ சுதந்திரமானது. அவன் தனக்கு ஏற்கனவே தேவன் என தீர்மானித்து வைத்திருக்கிறார் என்பதை ஆவியானவர் மூலம் அறிந்தவனாக இருக்கிறான். தனக்கு எதுவெல்லாம் தேவைப்படுகிறதோ அதுவெல்லாம் ஏற்கனவே அருளப்பட்டிருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கிறபடியால் அவன் எந்த சூழலிலும் பயப்படுவதுமில்லை, பதறுவதுமில்லை. சுயபுத்தியின்பால் சாய்வதுமில்லை. ஆவிக்குரியவன் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்களை எடுக்கக்கூடியவனாக இருக்கிறான். அப்படிச் செய்ய ஆவியானவர் அவனை பழக்குவித்திருக்கிறார்.

ஆவிக்குரியவன் ஆவியையும், வார்த்தையையும் சமமுக்கியத்துவத்தோடு பார்த்து, அந்த இரண்டிலும் சரியாகப் பயணிக்கக்கூடியவனாக இருக்கிறான். அதனால் அவன் பயணம் எங்கும் தடம் புரளுவதில்லை. ஆவிக்குரிய ஞானமும், நிதானமும் அவனை சேர்க்கவேண்டிய இடத்தில், சேர்க்கவேண்டிய நேரத்தில் சரியாகக் கொண்டுபோய் சேர்க்கும். கர்த்தருடைய ஆவியானவர்தாமே நம்மை அப்பேற்பட்ட ஆவிக்குரிய ஞானத்துக்குள் நடத்துவாராக! ஆமேன்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/M7E3DnhtsPE

>