பலன் அளிக்கிறவர்: இயேசு நம்மில்… நம்மோடு..

Home » பலன் அளிக்கிறவர்: இயேசு நம்மில்… நம்மோடு..

பலன் அளிக்கிறவர்: இயேசு நம்மில்… நம்மோடு..

என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும் போது சோர்ந்து போகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறது போல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள் என்று எபிரேயர் 12:5,6 வசனங்கள் சொல்லுகின்றன. சிட்சை என்ற வார்த்தைக்கு பயிற்சி என்பது அர்த்தமாகும். தேவன் நமக்குக் கொடுக்கும் சிட்சைகள் அதாவது பயிற்சிகள் நம்மை உடைப்பதற்கல்ல மாறாக உருவாக்குவதற்கே. சிட்சைகளின் மூலம் தேவன் நமக்குள் கிரியை செய்கிறார். அந்த கிரியைகளினால் ஏற்படும் மாற்றங்கள் நம்மிடத்தில் உடனடியாக வெளிப்புறமாக தெரியாவிட்டாலும், உள்ளான மாற்றங்கள் நமக்குள் ஏற்பட்டு வருவது மறுக்கமுடியாத உண்மையாகும்.

புலம்பல் 3:17-26 வசனங்களை வாசித்துப் பார்த்தால் அடுத்தடுத்து தனக்கு நேரிட்ட இன்னல்களை நினைத்து எரேமியா தீர்க்கதரிசி சோர்ந்து போகிறார். ஆனாலும் அந்த சோர்வு தன்னை ஆளுகை செய்துவிடாமல் உடனடியாக தனது பார்வையை மாற்றி கர்த்தர்மீது தனது பார்வையை வைத்து விசுவாச முழக்கமிட ஆரம்பிக்கிறார். கடைசியில் பிரச்சனைகள் எப்படியிருந்தாலும் கர்த்தர் நல்லவர், அவரது இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது என்ற முடிவுக்கு வருகிறார். தேவனுடைய இரக்கமும், கிருபையும் நம்மீது இருக்கிறபடியினால் நாம் ஒருபோதும் முறிந்து விழுவதில்லை.

நாமும் இதுபோன்ற சூழ்நிலைகளைக் கடந்து வரும்பொழுது சோர்ந்து போகாமல், முறுமுறுக்காமல் நமக்குள் கிரியை செய்யும் கர்த்தர்மீது நம்பிக்கை வைத்து, ஆண்டவரே எனக்கு இதன் மூலம் என்ன கற்றுத்தர சித்தமாயிருக்கிறீரோ அதைக் கற்றுத்தருவீராக என்று அவரிடம் விண்ணப்பம் பண்ணுவது நல்லது. தேவன் நமது சூழ்நிலைகளை மாற்றுவதற்கு முன்பாக சத்தியத்தைக் கொண்டு நம் சாயலை மாற்றுகிறவராய் இருக்கிறார். அவர் ஏற்படுத்தும் மாற்றம் நமக்கு நல்லது. அதன் விளைவு நித்திய நித்தியமான நல்ல விளைச்சலை நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவரும்.

ஆகவே நம்மிலும், நம்மோடும், நமக்காகவும் கிரியை செய்கிற தேவன் ஒருவர் நமக்கு இருக்கிறபடியால் நாம் தைரியமாக காரியத்தை நடப்பிக்கலாம். அல்லேலூயா!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/kU7Vd13qtCc

>