நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் என்று 1 கொரிந்தியர் 3:6,7 வசனங்கள் சொல்லுகின்றன. தேவன் விளையச் செய்கிறவராக இருக்கிற படியினால் நாம் தைரியமாக விதைக்கவும், நீர்ப்பாய்ச்சவும் முடியும்.
ஒவ்வொரு விதையும் ஒவ்வொரு வடிவம் கொண்டது. நாம் விதை இந்த வடிவத்தில் தான் இருக்கவேண்டும். அப்படியில்லாதது விதையல்ல என்று நினைக்கிறோம். உண்மையில் தேவன் நமக்குக் கொடுத்த வாழ்கை வசதிகள், வரங்கள், திறமைகள் அத்தனையும் விதைகளாக இருக்கிறது. ஆகவே நம்மிடம் என்ன இல்லை என்று பார்த்துக்கொண்டு இருப்பதைவிட, தேவன் நமக்கு என்ன கொடுத்திருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். நம்மிடத்தில் தேவன் கொடுத்த வரம் சாதாரணமானதாகத் தோன்றினாலும் தேவன் அதைப் பயன்படுத்தி அதிசயங்களைச் செய்ய வல்லவராக இருக்கிறார். மோசேயின் கோல் வெறும் மேய்ப்பனின் கோலாகத்தான் இருந்தது, ஆனால் அதைப் பயன்படுத்தித்தான் தேவன் செங்கடலைப் பிளந்தார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும்.
தேவன் நமக்குக் கொடுத்த உறவுகள்கூட விதைகளாகத்தான் இருக்கின்றன. அவரோடு நமக்கு உறவு இருப்பதால் உலகெங்கிலும் இருக்கும் தேவபிள்ளைகளோடு நமக்கு ஒரு தெய்வீக சம்பந்தம் இருக்கிறது. இந்த உறவு என்னும் விதை வளரவேண்டுமானால் நாம் அவ்வப்போது அதற்கு நீர்ப்பாய்ச்ச வேண்டும். கர்த்தர் நமக்குக் கொடுத்த நேரமும் ஒரு விதைதான். நாம் அதை விரையமாக்காமல் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் அது தரும் அறுவடை ஆசீர்வாதமானதாக இருக்கும்.
தேவன் தரும் விதைகளை நாம் ஜனங்களுக்குள் விதைக்கும்போதுதான் அது மிகப்பெரிய பிரதிபலனைத் தருகிறது. விதைக்கப்பட்ட அந்த விதைகள் நன்கு வளரும்படி தேவனே ஏற்ற காலத்தில் நல்ல மழையைப் பொழியப்பண்ணி, அந்த விதைகள் விளைந்து பலனளிக்கவும் செய்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/SQTLxYJGT_c