இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.(மத்தேயு 16:18)
தேவன் நம்மை மகிமையுள்ள சபையாக கட்டி எழுப்ப விரும்புகிறார். முதலாவதாக அவருடைய மகிமையையும், வல்லமையையும் வெளிப்படுத்துகிறவர்களாக நம்மைக் கட்டி எழுப்ப விரும்புகிறார். இரண்டாவதாக அவருடைய நோக்கங்களை செயல்படுத்துபவர்களாக நம்மைக் கட்டியெழுப்ப விரும்புகிறார். மூன்றாவதாக அவருடைய சாயலாக நம்மை மாற்றுவதன் விளைவாக நம்மூலம் தம்முடைய குணத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்.
இதைச் செய்து முடிப்பதில் அவர் உண்மையும், உறுதியும், வைராக்கியமுள்ளவருமாக இருக்கிறார். நாம் உண்மையற்றவர்களாக இருந்தாலும் அவர் உண்மையுள்ளவராகவே இருக்கிறார். பிலிப்பியர் 1:5 சொல்லுகிறபடி தொடங்கினவர் நிச்சயமாக நிறைவேற்றி முடிக்கவும் வல்லமையுள்ளவராக இருக்கிறார். அவர் மனிதர்களைப்போல பாதியில் விட்டுவிட்டுச் செல்வதில்லை. தொடங்கினதை முடித்து வைக்க அவர் தம்மையே முற்றிலும் ஒப்புக்கொடுத்தவராகவும் இருக்கிறார்.
தேவன் நம்மில் செய்வதாகச் சொன்ன கிரியையை என்று நாம் நம்பி, அது நம்மில் நிறைவேற வேண்டும் என்று விருப்பப்படுகிறோமோ அதுவே அவர் தயை செய்யும் காலம் என்பதற்கும், அவர் கட்டி எழுப்பி தமது மகிமையை வெளிப்படுத்தப்போகிறார் என்பதற்கும் அடையாளமாக இருக்கிறது. அந்த விருப்பம் நமக்குள் சுயமுயற்சியால் அல்ல, அது தேவனுடைய உள்ளத்தில் ஆரம்பித்து, மனிதனுடைய உள்ளத்தின் ஊடாகப் பாய்ந்து வெளிப்படக்கூடியதாக இருக்கிறது. ஆம், கொடுக்க விரும்புகிறவர் அதைப் பெற்றுக்கொள்ள நம்மையும் ஆயத்தப்படுத்துகிறார்.
.செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
.செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/l5BQWGgWS7c