அன்புக்கு பொறாமையில்லை என்று 1 கொரிந்தியர் 13:4 சொல்லுகிறது. அன்பு தன்னிடத்தில் இல்லாததை விரும்புவதில்லை. பொறாமையானது அதற்கு நேர் மாறானது. அடுத்தவர்களிடம் இருப்பது தன்னிடமும் இருக்க வேண்டும் என்று அது விரும்பும், அடுத்தவர்களிடம் இருப்பது அவர்களிடம் இல்லாமல் போகவேண்டும் என்றும் அது விரும்பும். பொறாமை என்பது ஒரு கடுமையான உணர்வாகும். ஒரு கிறிஸ்தவன் பொறாமையோடு போராடும் போராட்டம் மிகவும் கடினமானது.
பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? என்று நீதிமொழிகள் 27:4 சொல்லுகிறது. பாவத்துக்கு வேராய் இருப்பது பொறாமை. உலகின் முதல் பாவம், முதல் கொலை அத்தனைக்கும் பொறாமையே காரணம்.பரிசேயர் சதுசேயர் ஆகியோர் இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லக் காரணமும் பொறாமையே. ஆவிக்குரிய முதிர்ச்சி குணத்தில்தான் வெளிப்படுகிறது ஆகையால் நாம் பொறாமையை ஜெயிக்க வேண்டும்.
நாம் நம்மை மற்றவர்களோடு ஒப்பிட வேண்டியதில்லை. நம் ஒவ்வொருவரையும் தேவன் தனித்துவமுள்ளவர்களாக உருவாக்கியிருக்கிறார். பொறாமை எங்கே உண்டோ அங்கே பொல்லாத எண்ணங்களும், இழிவான செயல்களும் இருக்கிறது என்று யாக்கோபு 3:16 சொல்லுகிறது. அன்பில் அறிவும், உணர்வும் இருக்கிறது. தேவன் அன்பாகவே இருக்கிறபடியால் அன்பு தேவனை மையப்படுத்தக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் பொறாமையோ சுயத்தை மையப்படுத்துகிறது. பொறாமையை மேற்கொள்ள நாம் தேவனை மையப்படுத்த வேண்டும்,தெய்வீகமான கண்ணோட்டமும், ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலும் வேண்டும். அவரைக் குறித்ததான அறிவும், அவரோடிருக்கிற உறவும் பொறாமை என்கிற எண்ணத்தை மேற்கொள்ள நமக்கு உதவி செய்கிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/kgD9A8KmM4w