அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தன்னைப் புகழாது

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தன்னைப் புகழாது

அன்பைக் கூட்டி வழங்குங்கள்: தன்னைப் புகழாது

சுயவிளம்பரம் நம்மை பிசாசின் கையில் கொண்டுபோய் சேர்த்துவிடும் என்று ஒரு தேவ மனிதன் சொன்னார். ஏனெனில் முதன்முதலில் தன்னைத்தான் உயர்த்திக் கொண்டவன் பிசாசு. தற்புகழ்ச்சி கொண்டவர்களுக்கு தாங்கள் தற்பெருமையினால் தான் இப்படிப் பேசுகிறோம் என்பதே தெரியாத அளவுக்கு வஞ்சிக்கப்பட்டவர்களாய் இருப்பார்கள்.

தேவன் ஒருவர் மாத்திரமே புகழப்படத்தக்கவர். மனிதனுக்கு தற்பெருமைகொள்ள எந்த தார்மீக உரிமையும் இல்லை. ஏனெனில் மனிதன் விழுந்துபோய் மகிமையை இழந்தவனாக இருக்கிறான். நம்மிடம் மேன்மைபாராட்ட எதுவுமே இல்லை. நாம் நமது கிரியைகளால் இரட்சிக்கப்படவில்லை, அப்படியிருந்தால் ஒருவேளை மேன்மைபாராட்ட இடமுண்டு, நாம் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டவர்கள். இது முழுக்க முழுக்க தேவனுடைய ஈவேயன்றி வேறல்ல.

தேவன் நம்மை தெரிந்துகொண்டிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் நமது தகுதிகளின் அடிப்படையில் அல்ல. “ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்” என்று 1 கொரிந்தியர் 1:27,28 வசனங்கள் கூறுகின்றன.

தற்புகழ்ச்சி என்பது பொல்லாங்கானதாக இருக்கிறது என்று யாக்கோபு 4:16 சொல்லுகிறது. அது பொல்லாங்கன் நம்மிடத்தில் கிரியை செய்ய இடங்கொடுத்துவிடும். அது புளித்த மாவைப்போல விரைந்து பரவி நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் பற்றிப்பிடித்துவிடும். எனவே தேவ சமுகத்தில் மனத்தாழ்மையுடன் வாழ கர்த்தர்தாமே நமக்கு கிருபை செய்வாராக!

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/v4St22Ch3Hs

>