தேவன் கொடுக்கும் சுயாதீனப்பிரமாணம் அதாவது சுதந்திரம் அன்பின் பிரமாணத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. அந்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்தும் முதிர்ச்சியையும் அன்பே நமக்குக் கொடுக்கிறது. அன்பினால் கிரியை செய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு பயந்து கிரியை செய்யாமல் தேவ அன்பினால் ஏவப்பட்டு மாத்திரமே கிரியை செய்கிறான்.
தேவ அன்பு நம்மை அன்பினால் கிரியை செய்யும்படி உந்தித்தள்ளும் சக்தியாக இருக்கிறது. தேவன் நமக்கு நன்மை இன்னதென்று சொல்லிக்கொடுத்து, அதைச் செய்யும் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்து அதற்கான வல்லமையையும் கொடுத்திருக்க நாம் அவருக்கு கீழ்படிந்திருக்க கடனாளிகளாக இருக்கிறோம்.
அப்போஸ்தலனாகிய பவுல் எல்லாவற்றையும் அனுபவிக்க தனக்கு சுதந்திரம் உண்டென்றும், ஆனாலும் எல்லாம் எனக்கு தகுதியாக இராது என்றும் எழுதியிருக்கிறார். (1 கொரிந்தியர் 6:12) நாம் செய்யும் கிரியைகள் தேவனை மகிமைப்படுத்தி, மற்றவர்களுக்கு நன்மையாக அமைய வேண்டும். அன்பை மையப்படுத்தக்கூடிய சுயாதீனம் தேவனை மையப்படுத்தி, மற்றவர்களை முக்கியப்படுத்துகிறது.
சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவது நம்மை மறுபடியும் அடிமைத்தன தளைக்குள் இட்டுச்செல்லும் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. எனவே நன்மை தீமை இன்னதென்று வகையறுக்க தேவன் நமக்குத் தந்த அறிவைப் பயன்படுத்தி சுயாதீனப்பிரமாணமாகிய அன்பின் பிரமாணத்தில் கிரியை செய்வோமாக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Gs_VurQPmNo