வடிவமைக்கிறவர்: விண்ணப்பம்

Home » வடிவமைக்கிறவர்: விண்ணப்பம்

வடிவமைக்கிறவர்: விண்ணப்பம்

யாருடைய ஜெபம் வல்லமையுள்ளது என்று கேட்டால், வசனத்தின் அடிப்படையில் நீதிமான்கள் செய்யும் ஜெபமே வல்லமையுள்ளது எனலாம். நீதிமான் என்பவன் யார்? கிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிகரிக்கப்பட்டவனே நீதிமானாய் இருக்கிறான். தேவனுடைய பிள்ளையாக மாற்றப்பட்ட நீதிமானுக்கு தேவனோடிருக்கிற உறவினால் ஜெபிக்கிறதற்கான மனதைரியம் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஜெபத்தில் தேவனுடைய வார்த்தை முக்கியப்படுத்தப் படுகிறபடியால் அந்த விண்ணப்பங்கள் வல்லமையுள்ளதாக இருக்கின்றன.

எனவே ஜெபத்தில் நாம் போடும் சத்தமோ, ஜெபிக்கும் நேரமோ அல்லது ஜெபிக்கும் விதமோ முக்கியம் அல்ல, அங்கு உறவே முக்கியமானதாக இருக்கிறது. அவர் எப்படிப்பட்டவர் என்பதை நாம் நினைவுகூரும் போது நமது ஜெபங்கள் மகா வல்லமை உள்ளவைகளாய் மாறுகின்றன.

அவர் நம்மை மறவாமல், தாழ்விலும் நினைவுகூருகிற தேவன், நமக்கென நல்ல திட்டம் வைத்திருக்கிற தேவன், நம்மையும் நமது சந்ததியையும் சதா காலங்களிலும் நடத்த வல்லமையும், உண்மையுமுள்ள தேவன், திரளான மீட்பை உடைய தேவன் என்று அவரை அறிந்துகொள்ளும்போது அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் என்ற விசுவாசம் வந்துவிடுகிறது.

அவரை நாம் அறிந்துகொள்வோமானால் அவர் நமக்கு ஒரு விஷயத்தைக் குறித்து சரி என்று சொன்னாலும் அது நன்மைக்கே, வேண்டாம் என்று சொன்னாலும் அது நன்மைக்கே என்பதை உணர்ந்துகொள்ளுவோம். ஏனெனில் அவர் தீர்மானிக்கக்கூடிய தேவனாக இருக்கிறார். நமக்கு எது நன்மை பயக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/O-csX11g2uI

>