கர்த்தர் நம்மை நிலைப்படுத்த அதாவது இன்றைக்குரிய பேச்சு வழக்கில் சொல்லப்போனால் நம்மை செட்டில் செய்ய விரும்புகிறார். நாம் நிலையில்லாமல் அலைந்துகொண்டிருப்பதில் கர்த்தருக்கு விருப்பமில்லை. அவர் நம்மை எப்படி நிலைப்படுத்துகிறாரெனில் தமது வார்த்தையின் வாயிலாக நிலைப்படுத்துகிறார். ஏனனில் வானங்களில் நிலைப்படுத்தப்பட்ட அவருடைய வார்த்தையினால்தான் அண்ட சராசரங்களும் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. நட்சத்திரங்களும் கோள்களும் அவைகளுக்கென்று நியமிக்கப்பட்ட பாதையில் சுற்றி வருகின்றன.
அவர் நம்மை தம்முடைய சுவிசேஷத்தின்படியே அதாவது வார்த்தையின்படியே நிலைப்படுத்த வல்லவர் என்று ரோமர் 16:26 சொல்லுகிறது. சுவிசேஷம் என்பது என்ன? கிறிஸ்துவானவர் என்ன செய்தார், என்ன செய்துகொண்டிருக்கிறார், என்ன செய்யப்போகிறார் என்பதைக் குறித்த அறிவு ஆகும். அந்த அறிவை நாம் பெறும்பொழுதுதான் வானங்களில் நிலைப்படுத்தப்பட்ட வார்த்தையானது நம்முடைய வாழ்க்கையை நிலைப்படுத்தக்கூடியதாக மாறுகிறது.
அவர் நமக்காக என்ன செய்தாரெனில், நமக்காக அவர் யாவையும் ஏற்கனவே சிலுவையில் செய்து முடித்திருக்கிறார். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரெனில், அவர் சிலுவையில் நமக்காக செய்து முடித்ததை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அவற்றின் முன்ருசியை நமக்கு காட்டிக் கொண்டிருக்கிறார். அவர் இனி என்ன செய்யப் போகிறாரெனில், அவர் வாக்குப்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராகவும், நிறைவேற்றி முடிக்கும்வரை நம்மைக் கைவிடாதவராகவும் இருக்கிறார்.
இதை நாம் அறிந்துகொள்ளும்போது கிருபையினால் நம் இருதயம் ஸ்திரப்படுகிறது. இந்த அறிவானது நமக்கு நினைப்பூட்டுதலாய் இருந்து நாம் சோர்ந்துபோகும்பொழுதெல்லாம் நம்மைத் தூக்கி நிறுத்துகிறது. எனவே நாம் எதிராளியாகிய பிசாசானவனின் தந்திரங்களை தகர்த்தெறியும்படிக்கு நாம் அறிக்கையில் உறுதியாக இருந்து, தெளிந்த புத்தியுள்ளவர்களாய் விசுவாசத்தில் பெலப்பட வேண்டும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/4ZYjHRXFxRU