பிறர் நமக்கு செய்த தீமைகளை மன்னித்தலும், மறத்தலும் எளிதான விஷயமல்ல, மனம் அதை எப்போதும் நினைவில் வைத்திருந்து ஏற்ற சமயம் வரும்போது பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும். குற்ற மனசாட்சி, கசப்பு மற்றும் துக்கம் ஆகியவை அதைக் கொண்டிருக்கும் ஆன்மாவைக் கறைப்படுத்தி, அந்த நபரை அழித்துவிடும் அளவுக்கு ஆபத்தானவை. இவற்றை நாம் கையாளாவிடில் அது நம்மைக் கையாண்டு விடும். எனவேதான் பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும் என்று கர்த்தர் காயீனை எச்சரித்திருக்கிறார்.
இதைக் கையாள ஒரே வழி கர்த்தர் நமக்கு மன்னித்ததுபோல நாம் மற்றவர்களுக்கு மன்னிப்பது. ஆனால் சுயபெலத்தால் அது சாத்தியமே இல்லை. கர்த்தரைச் சார்ந்துகொண்டு அவர் கொடுக்கும் பெலத்தினால் நாம் மன்னிக்கவும் மறக்கவும் வேண்டும். நினைவு வரும்பொழுது மறுபடியும் மன்னிக்க வேண்டும். ஒரு காலகட்டம் வரும்பொழுது அது நம்மேல் வைத்திருந்த பிடிமானம் முற்றிலுமாய் தளரும் வரை மன்னிக்க வேண்டும். இதைத்தான் ஏழு எழுபது முறை மன்னிப்பது என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார்.
தயவு, மனதுருக்கம் ஆகியவற்றை தேவன் நம் மனதில் ஊற்றி நமக்கு மன்னிக்கும் அன்பைத் தருகிறார். அந்த அன்பு தீங்கு நினையாது, கணக்கு வைக்காது, கண்டுகொள்ளாது. மாறாக அது பழிவாங்குதல் தனக்குரியதல்ல, அது தேவனுக்குரியது என்பதை அறிந்து நீதியாய் தீர்ப்பு செய்கிறவரிடத்தில் பிரச்சனையை ஒப்புவிக்கிறது. பிரச்சனைக்குரிய நபரை தண்டிக்காமல் விட்டுவிடுகிறது. அப்படிச் செய்யும்போது பிசாசின் சூழ்ச்சி நம் வாழ்வில் தகர்க்கப்பட்டு, தேவ ஆசீர்வாதம் நம்மைச் சூழ்ந்துகொள்கிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/vhintD6el1I