அன்பை கூட்டி வழங்குங்கள்: நல்லிணக்கம்

Home » அன்பை கூட்டி வழங்குங்கள்: நல்லிணக்கம்

அன்பை கூட்டி வழங்குங்கள்: நல்லிணக்கம்

தேவன் நம்மை மன்னிக்கிறவர், நமது பாவங்களை மறக்கிறவர் என்று நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் வெறும் மன்னிப்பதோடும் மறப்பதோடும் காரியம் நின்றுவிட்டால் அது முழுமை பெற்றதாகாது. அவருடைய அன்பில் அதற்கும் மேலான படிகள் இருக்கிறது. அதுதான் ஒப்புரவாதல் அதாவது நமக்கும் அவருக்கும் இடையே நல்லிணக்கம், அதன் பின்னர் சிறப்பாக்கப்படுதல் அல்லது சீரமைக்கப்படுதல். இதன்பின்னர்தான் அந்த மன்னிப்பானது முழுமை பெறுகிறது. நமக்கும் அவருக்குமிடையே இருந்த உறவில் இது நடந்திருக்குமென்றால் நாம் நமது சக மனிதர்களோடு கொண்டிருக்கும் உறவிலும் இதுவே நடைபெற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

ஆனால் இதை நமது சுயபெலத்தினால் செய்ய இயலாது. நமக்குள் இருக்கும் ஆவியானவரது செயலால் மட்டுமே இது சாத்தியமாகிறது. எனவேதான் அதை சாத்தியப்படுத்தும்படி நம்முடைய இருதயங்களில் பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவ அன்பு ஊற்றப்பட்டிருக்கிறது. ஊற்றப்பட்ட தேவ அன்பு அந்த நல்லிணக்கத்தை சகோதரர்களிடையே சாத்தியப்படுத்துகிறது. இதற்கு முன்னுதாரணமாக கர்த்தராகிய இயேசுவே நமக்கு காணப்படுகிறார். அவர் சிலுவைக்குச் செல்லும்முன்பாக தம்மை விட்டு ஓடிப்போன சீஷர்களை மன்னித்தது மட்டுமல்லாமல் தாம் உயிர்தெழுந்த பின்பு அவர்களை சந்தித்து அவர்களோடு மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை சீரமைக்கவும் செய்தார்.

தம்மை சந்திக்க தமது தமையனாகிய ஏசா 400 பேருடன் வருகிறான் என்று கேள்விப்பட்ட யாக்கோபு தேவனிடம் தஞ்சமடைந்து அவரிடம் உதவிகோர அவர் ஏசாவின் மனதை மாற்றினதினால் அங்கு அவர்களுக்கிடையே மன்னிப்பும், நல்லிணக்கமும் ஏற்பட்டது. அவர்கள் உறவு சீரமைக்கப்பட்டது. அது நிச்சயமாகவெ மனித பெலத்தினால் சாத்தியமல்ல. கர்த்தர் கிரியை செய்தால் மட்டுமே அது சாத்தியமாகிறது. எனவே தேவனிடம் விண்ணப்பம் செய்ய வேண்டியதும் அவசியமாகிறது.

தேவன் நமது குடும்பங்களில், சபையில் உறவுகளில் ஒப்புரவாக்குதலுக்கென்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். நாம் அதை அறிந்து அவரிடம் ஜெபிக்க அவர் நம்மை நிச்சயம் அதற்கேற்ற விதத்தில் நடத்துவார். ஏனெனில் அவர் மன்னிக்கிறவர், ஒப்புரவாக்குகிறவர், உறவுகளை சீர்படுத்துகிறவர். அவர் அருளும் ஆசீர்வாதமானது உறவுகளை சீர்படுத்துகிறதாக இருக்கிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Q9dKKwiBoLc

>