அன்பைக் கூட்டி வழங்குங்கள் – சத்தியத்தில் சந்தோஷப்படும் 2

Home » அன்பைக் கூட்டி வழங்குங்கள் – சத்தியத்தில் சந்தோஷப்படும் 2

அன்பைக் கூட்டி வழங்குங்கள் – சத்தியத்தில் சந்தோஷப்படும் 2

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் என்று அப்போஸ்தலனாகிய யாக்கோபு சபைகளுக்கு புத்தி சொல்லுகிறார். கடுமையான சோதனைகளின் மத்தியில் ஒரு மனிதன் எப்படி சந்தோஷமாக இருக்க இயலும்? அப்படி இருக்க முடியும் என்பதற்கான உதாரணங்களை நாம் இரண்டு ஆதிச்சபைகளில் காணமுடியும். தெசெலோனிக்கே சபையினர் மிகுந்த உபத்திரவத்தில் பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே சத்தியத்தை ஏற்றுக்கொண்டதாகவும், மக்கதோனியா சபையினர் மிகுந்த உபத்திரவத்தில் சோதிக்கப்படுகையில் கொடிய தரித்திரமுடையவர்களாக இருந்தும் பரிபூரண சந்தோஷத்தோடு உதாரத்துவமாக கொடுத்ததாகவும் வேதம் சாட்சி பகருகிறது.

இது அவர்களுக்கு எப்படி சாத்தியமானது?

சந்தோஷம் என்பது உலகத்தைப் பொறுத்தவரை வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களோடு தொடர்புடையது. ஆனால் சத்தியத்தை அறிந்தவர்களது சந்தோஷம் சூழ்நிலை சார்ந்ததல்ல, அது சத்தியம் சார்ந்தது. சத்தியம் நமக்குள் உள்ளான மாற்றத்தை உண்டாக்குகிறது. அது கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறது. எப்பேற்பட்ட பரிபூரண பேரானந்தம் நமக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நமக்கு சொல்லிக்கொடுக்கிறது. அந்த சந்தோஷத்தை நினைக்கையில் நமக்கு முன்னால் இருக்கும் சங்கடங்கள் நமக்கு ஒரு பொருட்டாய் தெரிவதில்லை.

நாம் இந்த உலகத்தில் என்ன சாதித்திருக்கிறோம் என்பதைவிட கிறிஸ்துவைப்போல எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதே ஆவிக்குரிய உலகத்தில் மிக முக்கியமான காரியம். கர்த்தர் தம்முடைய சத்தியத்தை வைத்துத்தான் அந்த மாற்றத்தை நமக்குள் கொண்டுவருகிறார்.தேவன் தன்மையை மாற்றுகிறார். நமது உள்ளம் புதிதாக்கப்படுகிறது. உள்ளம் புதிதாகும்போது சூழ்நிலைகளைக் குறித்து கலங்காமல் சத்தியத்தைக் குறித்து சந்தோஷப்படும் முதிர்ச்சியை நாம் பெற்றுவிடுகிறோம்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/TtCBrSkIIcY

>