உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று யோவான் 1:10 கூறுகிறது. சொந்தமானவர்களால் ஏற்றுக்கொள்ளப் படாதபோது ஒருவிதமான வேதனையும் விரக்தியும் மனதை ஆக்கிரமிக்கிறது. லேயாளுக்கு கணவனின் அன்பு மறுக்கப்பட்ட போது அவள் உடைந்துபோனாள், தாவீது தன் மனைவியால் அவமதிக்கப்பட்டன், தன் மாமனாரால் பகைக்கப்பட்டான், தன் மகனால் துரத்தப் பட்டான். அவன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களின் நிராகரிப்பை அனுபவித்தே கடந்துவந்தான்.
மனிதர்களால் வரக்கூடிய நிராகரிப்பை தேவனால் வந்த அங்கீகாரத்தின் மூலமாகத்தான் மேற்க்கொள்ள முடியும். தேவன் நம்மை தமது சொந்தப் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற உண்மை எல்லா நிராகரிப்புகளையும் ஜெயிக்க நமக்கு உதவி செய்கிறது. கர்த்தராகிய இயேசுவை அவருக்கு சொந்தமானவர்கள் புறக்கணித்தாலும் பரமபிதாவானவர் வானத்தைத் திறந்து, “இவர் என் நேசகுமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்” என்று சொன்னதை இங்கு நினைவுகூறுங்கள். நம் பரமபிதாவின் பாசத்தைக் கொண்டு மனித விரோதங்களை உலகில் ஜெயித்து நாம் இந்த பூமிக்கு வந்த நோக்கத்தை நிறைவேற்ற நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்.
தாவீது தான் மனிதர்களால் அவமதிக்கப்பட்டபோதும் அதன் நிமித்தம் முற்றிலும் உடைந்துவிடாமல் “யார் என்னைக் கைவிட்டாலும் கர்த்தர் என்னை ஏற்றுக்கொண்டிருக்கிறார், அவர் அன்பைவிட்டு எதுவும் என்னைப் பிரிக்க முடியாது” என்ற உணர்வில் உறுதியாக இருந்தார். தேவனோடு நமக்கு இருக்கக்கூடிய உறவுதான் மற்ற எல்லாவற்றோடு நமக்கு இருக்கக்கூடிய உறவை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கிறது. அவர்தான் விலையேறப்பெற்ற அஸ்திபாரமாக் நம்மை விசேஷித்த விதத்தில் வைத்திருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/3sBxxqudoQQ