உறவு… திருச்சித்தம்.. திருவசனம்

Home » உறவு… திருச்சித்தம்.. திருவசனம்

உறவு… திருச்சித்தம்.. திருவசனம்

அப்போஸ்தனாகிய பேதுரு ஒருநாள் ஒரு தரிசனம் கண்டார். அவர் அந்த தரிசனத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கையில் ஆவியானவர் அவரோடு பேச ஆரம்பிக்கிறார்.. தேவன் தமது திருவுள்ளத்தை நமக்கு இவ்விதமாகத்தான் வெளிப்படுத்துகிறார். தமது திருவுள்ளத்தை தமது திருவார்த்தையின் மூலம் வெளிப்படுத்துகிறார். அந்த வார்த்தையைப் பற்றிக்கொண்டு அதை நாம் சிந்திக்கும்போது புரிய வேண்டிய சத்தியம் நமக்கு தெள்ளென விளங்குகிறது.

தேவசித்தத்துக்கும் தேவ வார்த்தைக்கும் ஒரு இணைப்பு இருக்கிறது. அவருடைய திருவுள்ளத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவரது திருவார்த்தையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பேதுரு அந்த தரிசனத்தைப் பற்றிக்கொண்டு சிந்தித்ததுபோல, நாம் வார்த்தையைப் பற்றிக்கொண்டு அதைக்குறித்தே சிந்திக்க வேண்டும். சிந்திப்பதுதான் புரிந்துகொள்ளுதலுக்கு திறவுகோலாக இருக்கிறது. ஆண்டவரே சரியான முறையில் சிந்திக்க கிருபைதாரும் என்று அவரிடம் ஜெபிக்க வேண்டும்.

தேவசித்தம் நம்மைக்குறித்து மாத்திரமல்ல நமது சந்ததியைக் குறித்தும், நம் எதிர்காலத்தைக் குறித்தும் நமக்கு வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறபடியால் நாம் தேவசித்தத்தை மிகவும் முக்கியப்படுத்துகிறவர்களாகக் காணப்பட வேண்டும். நம்மையல்ல, தேவனை மையப்படுத்தியும், முக்கியப்படுத்தியும் நாம் சிந்திக்க வேண்டும். லாபமா நஷ்டமா என்று சிந்திக்காமல் சரியா தவறா என்பதன் அடிப்படையில் சிந்திக்க வேண்டும். அப்பொழுது அவர் நமக்காக எழுதிவைத்த அவருடைய உயிலாகிய வேதவசனம் தனக்குள்ளிருந்து நமக்கு ஆசீர்வாதங்களை அள்ளித்தரும்.

ஆகவே மதியற்றவர்களாயிராமல், அசதியாய் இராமல், சோம்பலாய் இராமல், கேள்வியில் மந்தமாயிராமல், எனக்கு எல்லாம் தெரியும் என்று நினையாமல் திருசித்தத்தை அறிய திருவசனத்துக்குள் சிந்திப்போமாக! அப்படி சிந்திக்கும்போது தேவன் நமக்கு புத்தியைக் கொடுப்பார். தாம் சொன்னதைப் புரிந்துகொள்ள நமக்கு கிருபை செய்வார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/5j-7EqAmFcE

>