தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..சிந்தையே ஆயுதம்

Home » தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..சிந்தையே ஆயுதம்

தெய்வீகப் பார்வை..தெய்வீக பொறுமை..சிந்தையே ஆயுதம்

ஒரு விசுவாசிக்கு மனதில் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்படுவது இயல்பு. ஆனால் அப்படித் தோன்றும் பிரச்சனைகளை நாம் சிந்தையைக் கொண்டுதான் வெல்ல முடியும். சிந்தைதான் நமக்கு ஆயுதமாக இருக்கிறதென்று வேதம் சொல்லுகிறது. அதுவே தாக்கும் ஆயுதமாகவும் தடுக்கும் ஆயுதமாகவும் இருக்கிறது.

சிந்தையை நாம் எப்படி ஆயுதமாகப் பயன்படுத்த முடியும்? நாம் சிந்திக்கிற விதம் சரியாக இருக்க வேண்டும். அப்போது நமது பேச்சும் செயலும் தெளிவாக இருக்கும். கர்த்தருடைய எல்லா வார்த்தைகளும், கட்டளைகளும் செம்மையென்ற நீதிக்குரிய புரிதல் நமக்கு இருக்க வேண்டும். தேவன் என்ன சொன்னார் என்பதைவிட, எதற்காக சொன்னார் என்கிற நுண்ணறிவு இருக்கும்போது அவர் சொன்ன யாவும் நம் நன்மைக்கே என்ற புரிதல் ஏற்படும்.

கிறிஸ்து இயேசுவின் சிந்தை தங்களுக்கு உண்டாயிருப்பதாக அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 2:16ல் குறிப்பிடுகிறார். கிறிஸ்துவின் வார்த்தைதான் அவரது சிந்தையாக இருக்கிறது. இந்த சிந்தையையே நாம் ஆயுதமாக தரித்துக்கொள்ள வேண்டும். நாம் விளங்கிக்கொள்வதற்காகவே அவர் தமது சிந்தையை வார்த்தையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வார்த்தையை தியானிக்கும்போது நம் சிந்தை அவர் சிந்தையாக மாறுகிறது.

தேவனுடைய வார்த்தையை புரிந்துகொள்ளும்போது நம்முடைய சிந்தை மாறுகிறது. நாம் இரட்சிக்கப்படும்போது தேவன் நமக்கு புதிய மூளையைத் தருவதில்லை. ஆனால் புதிய மனப்பக்குவத்தைக் கொடுக்கிறார். அறிவுப்பூர்வமாக புரிந்துகொண்டது இதயப்பூர்வமாக மாற வேண்டும்.

வேதவார்த்தையின் மூலமாக மட்டுமன்றி ஜெபத்தின் மூலமாகவும் கர்த்தர் நம்மோடு பேசுகிறார். அவர் பேசுவதைக் கேட்கக் கேட்க நாமும் அவரைப்போலவே பேச ஆரம்பித்துவிடுவோம். ஆக, வேதமும், ஜெபமும் நம் சிந்தையை உருமாற்றப் பயன்படுகின்றன. தேவன்தாமே அவரின் சிந்தையை நமது சிந்தையாக மாற்றுவாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/9Bntg09BxuQ

>