கர்த்தராகிய தேவன் நமக்குள் கிரியைசெய்து தம்முடைய பிரமாணங்களை நமது இருதயத்தில் எழுதிவைக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. நமது இருதயத்தில் எழுதப்பட்ட அந்த அவருடைய நல்வார்த்தையை நாம் கவனிக்கும்போது நம்முடைய வாழ்வில் தேவையற்றவைகள் மறைந்து, இருக்க வேண்டியவைகள் இருக்கவேண்டிய பிரகாரமாக மாறும். அதற்கான வல்லமை அந்த வார்த்தைக்குள்ளேயே இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தேவன் நாம் புரிந்துகொள்ளும் விதத்திலேயே மாற்றம் கொண்டுவருகிறார். எந்த சூழ்நிலையிலேயும் நாம் வசனம் கொண்டே எண்ணிப்பார்க்கக்கூடிய அளவுக்கு நமது சிந்தையில் ஒரு முதிர்ச்சியை அவர் தருகிறார். அவருடைய சிந்தையையே நம்முடைய சிந்தையாக மாற்றுகிறார்.
நாம் பொதுவாக தேவசித்தம் செய்யவேண்டும் என்று விரும்பினால் அதன் நிமித்தம் பிரச்சனைகள் வருகிறது. அதே நேரத்தில் நமது விருப்பப்படி நடக்கும்போது அதனால் பிரச்சனைகள் வருவதில்லை. ஆனால் நாம் தற்காலிகமான பிரச்சனைகள்மீது மீது கண்களை வைக்காமல் நிரந்தரமான ஆசீர்வாதங்களின் மீது கண்களை வைத்து தேவசித்தம் செய்ய முற்படும்போது தேவன் முடிவில் நமக்கு வெற்றியையும் ஆசீர்வாதத்தையும் வைத்திருக்கிறார்.
தேவன் தம்முடைய வார்த்தையை நம்முடைய இருதயத்தில் எழுதி நினைவுபடுத்துகிறார். இப்போது இருக்கும் பாடுகள் இனிவரும் மகிமைக்கு ஒப்பானதல்ல என்று நினைவுபடுத்துகிறார். ஆகவே பிரச்சனையைக் கண்டு விலகாமல் அதை எதிர்கொண்டுபோய் ஜெயிக்க முடியும். பிரச்சனைகளின் நிமித்தம் நன்மை செய்வதை நிறுத்தாமல் அதை தொடர்ந்து செய்ய வேண்டும். நம்மை முழுமையாக தேவனிடத்தில் ஒப்படைக்க வேண்டும். அப்போது நிச்சயமாகவே தேவதிட்டம் நம்மில் நிறைவேற நமக்கு நன்மையும், தேவனுக்கு மகிமையும் உண்டாகும்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/9a4KyyIyGOw