கர்த்தருடைய தாசனாகிய தானியேல் கையில் எரேமியாவின் புத்தகம் கிடைக்கிறது. அதிலிருந்து அவர் இஸ்ரவேலை கர்த்த பாபிலோனின் நுகத்தடியில் இருந்து விடுவிக்கும் நேரம் வந்துவிட்டதை வாசித்து, அறிந்து, அதற்காக அவர் ஜெபிக்கிறதை நாம் தானியேல் 9:2,3 வசனங்களில் வாசிக்க முடியும். அதாவது தேவனுடைய திட்டம் அவருடைய புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சங்கீதம் 40:7ல் கிறிஸ்துவைக்குறித்த தீர்க்கதரிசனமாக எழுதப்பட்ட வசனத்தை நாம் அறிந்திருக்கிறோம்.
நம்மைக்குறித்த தேவதிட்டமும்கூட அவருடைய புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. நம்மைக் குறித்து என்ன எழுதியிருக்கிறது என்பதை நமக்கு கர்த்தர்தான் வெளிப்படுத்தமுடியும். எனவேதான் என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமியா 33:3) என்று அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார்.
விசுவாசமில்லாமல் கேட்கிறவர்களுக்கு அவருடைய வார்த்தைகள் பிரயோஜனப்படாது. ஆனால் அவருடைய வார்த்தையை உணவைப்போல உட்கொள்ளும் ஆர்வமுடையவர்களாக நாம் இருப்போமானால் நமக்கு அவருடைய வேதமே மனமகிழ்ச்சியாகவும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகவும் இருப்பதை நம்மால் உணரமுடியும். நமக்கு இன்னது தேவையென்று அறிந்திருக்கும் பிதா நம்மோடு இருக்கிறபடியினால் நாம் எப்போதும் நமக்கு இருப்பதில் திருப்தியடைந்து காணப்படுவோம்.
ஒருவேளை கடினமான சூழலை கடக்க நேர்ந்தாலும் எது நம்மை அழுத்துகிறதோ, எது நம்மை ஆழ்த்துகிறதோ அதை ஆளுவதற்கு தேவன் நமக்கு வார்த்தை வைத்திருக்கிறார். அந்த வார்த்தை விருத்தியடைந்து சூழ்நிலைகளை மேற்கொள்ளும். ஆகவே தீர்மானத்தின்படி அழைக்கப்பட்ட நமக்கு சகலத்தையும் நன்மைக்கேதுவாகவே செய்கிற தேவன் நம்மோடு இருக்கிறபடியினால் அவருடைய சித்தத்தை செய்வதே நமக்கு மனமகிழ்ச்சியாக இருப்பதாக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/wJ7xa7IppNI