ஓட்டைப் பானையில் தண்ணீர் நிற்காது என்பார்கள். நம்மிடத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் வரையில் நாம் பெறும் ஆசீர்வாதங்கள் ஓட்டைப் பானையில் தண்ணீர் போல நம்மிடம் தங்காமல் வழிந்து சென்றுவிடும். நம்மிடம் உள்ள அந்தக் குறையை சரிசெய்வதற்காக நாம் தேவனை நோக்கி நமது முகத்தை நேராக்குவது அவசியமாகிறது.
இதற்குத்தான் சிலர் உபவாசத்தைப் பயன்படுத்துகிறார்கள். தேவனுக்கும் நமக்கும் இடையே தடையாக இருக்கும் விஷயங்களை தவிர்ப்பதே உபவாசம். தேவசித்தத்தை அறியும்படிக்கு தாசனாகிய தானியேல் உபவாசம் பண்ணி தன் முகத்தை தேவனுக்கு நேராக்கிய உதாரணத்தை நாம் தானியேல் 9:3ல் வாசிக்கலாம். தானியேல் உபவாசத்தில் அமர்ந்து பாவ அறிக்கை செய்வதை அந்த அதிகாரத்தில் வாசிக்க முடியும்.
பாவ அறிக்கை என்பது நாம் செய்த தவறுகளை நியாயப்படுத்த்தாமல், அவற்றை ஒத்துக்கொண்டு அதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளுதலாகும். அதன்பின்னர் எந்த கிறிஸ்துவைப் போல நம்மை மாற்ற உதவும் வசனச் சூழலில் வளர நம்மை ஒப்புக்கொடுப்பதும் அவசியமாகும். அப்படி ஒப்புக்கொடுக்கும்போது நாம் செழித்து வளர வாய்ப்பிருக்கிறது.
பாவ அறிக்கை குறித்த விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு காரியம் அதிகபட்சமான குற்ற உணர்வுடன் எதிர் ஓரத்துக்கும் போய்விடக்கூடாது. அப்படி செய்தால் பெலவீனமாய் இருக்கும் மனசாட்சியானது முற்றிலுமாய் உடைந்துவிடும். அப்படிப்பட்ட நேரங்களில் கர்த்தரே நம்முடைய மனசாட்சியிலும் பெரியவராக இருந்து நம்மை கட்டி எழுப்புகிறவராக இருக்கிறார்.
உங்களை நீங்களே நியாயந்தீர்த்துக் கொள்ளாமல் தேவன் உங்களை ஆராய்ந்து உங்களைக் குறித்து வெளிப்படுத்த அவருக்கு இடங்கொடுங்கள். அவரே உங்களுக்கு போதித்து அற்புதமான வழியில் உங்களை நடத்துவார். அப்பொழுது நீங்கள் பெறும் ஆசீர்வாதங்கள் நிரந்தரமாக உங்களிடம் தங்கும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/rNpxQxdYMy4