அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே என்று 2 கொரிந்தியர் 8:9 கூறுகிறது. ஐசுவரியமும் தரித்திரமும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமே என்று பலரும் நினைக்கிறார்கள். எனவே இந்த வசனத்தையும் பொருளாதாரத்தோடு தொடர்புபடுத்தியே சிந்திக்கிறார்கள். ஒரு மனிதன் பொருளாதாரத்தில் ஐசுவரியமுள்ளவனாக இருந்து குணம், ஆரோக்கியம், அறிவு ஆகியவற்றில் தரித்திரனாக இருக்க முடியும்.
ஐசுவரியம் என்பது என்ன? எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிப்பதற்குத் தேவையான நிறைவும், திறனுமே ஐசுவரியம் ஆகும். தரித்திரம் என்பது என்ன? நம்முடைய இல்லாமையும், இயலாமையுமே தரித்திரம். நம்முடைய ஜென்ம சுபாவமே நம்மை தேவனுடைய பிரமாணத்தை நிறைவேற்ற முடியாத தரித்திரர் ஆக்குகிறது. ஒரு மனிதன் எப்பொழுது தன்னுடைய தரித்திரத்தை உணர்ந்து “என்னால் இயலாது” என்று தனது இயலாமையை ஒப்புக்கொள்ளுகிறானோ அப்பொழுது அவனுக்கு அருகில் தேவனுடைய ராஜ்ஜியம் வந்துவிடுகிறது.
கர்த்தராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட மனிதன் அவரோடு உள்ள உறவின் அடிப்படையில் தெய்வீக நோக்கத்தோடு இணைக்கப்பட்டுள்ளான். எனவே அவனுக்கான தெய்வீக ஐசுவரியமும் எப்பொழுதும் தேவநோக்கத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அந்த ஐசுவரியத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது? முதலாவது வைக்க வேண்டியதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் மற்றவை இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும். ஆம், உங்களுக்கு பணத்தில் தேவனுடைய ஆசீர்வாதம் வேண்டுமென்றால் நீங்கள் அவருக்கு முதலிடம் தரவேண்டும்.
நம்முடைய நிர்ப்பாக்கியமான தரித்திர நிலைமை கண்டு கர்த்தராகிய எல்லையில்லா இறைவனாகிய இயேசுவே ஒரு எல்லைக்கும், வரம்புக்கும் உட்பட்ட மனிதப்பிறப்பை எடுத்தார். இதுதான் நம்மை ஐசுவரியவான்களாக்கும்படி அவர் அடைந்த தரித்திரம். அவர் நமக்காக தரித்திரரானதால் நாம் அவருடைய சாயலைப் பெற்று ஐசுவரியவான்களாக மாறுகிறோம். அவர் நம்மேல் வைத்த கிருபை எத்தனை பெரிது!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/dL2tMqD8tyA