தமஸ்குவுக்குச் செல்லும் வழியில் அப்போஸ்தலனாகிய பவுலை சந்திக்கும் தேவன் உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன் என்று கூறுவதை அப்போஸ்தலர் 26:16ல் நாம் வாசிக்க முடியும். தேவன் பவுலுக்கு பவுலைக் குறித்த தரிசனத்தை வெளிப்படுத்தவே அவருக்கு தரிசனமானார். ஏனெனில் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கான தரிசனமும் கர்த்தரோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
கர்த்தர் நமக்கு தரிசனமாகி நம்முடைய வாழ்க்கைக்குரிய தரிசனத்தை தம்முடைய வார்த்தையினாலே வெளிப்படுத்துகிறார். அவருடைய வார்த்தையில்தான் தரிசனமும், வெளிப்பாடும் அடங்கியிருக்கிறது. எனவே நாம் அவருடைய வார்த்தைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அதன்மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். ஏனெனில் அவருடைய வார்த்தையே நம்முடைய தரிசனத்தைக் குறித்த சித்திரத்தை வரையக்கூடியதாக இருக்கிறது.
கர்த்தர் நமக்கு தரிசனமாகி தம்முடைய வார்த்தையினாலே தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தும்பொழுது நாம் என்ன பிரதிமொழி கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். சாலோமோனுடைய கடைசி காலங்களில் அவன் தேவனைவிட்டு தன்னுடைய இருதயத்தை விக்கிரகங்களுக்கு நேராக திருப்பினபொழுது, அவர் அவனுக்கு இரண்டுமுறை தரிசனமாகி பேசியும் அவன் அவருக்கு செவிகொடுக்கவில்லை. சாலோமோனைப்போல நம்முடைய இருதயங்களும் கடினப்பட்டுவிடக்கூடாது என்று நாம் ஜெபிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
அவர் நம்மை நியமிக்க தரிசனமாவது மாத்திரமல்ல, நியமித்த காரியத்தை செய்துமுடிக்க பெலனையும் தந்து அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி, வாசல்களைத் திறந்து வாய்க்கவும் பண்ணுகிறார். நம்மால் கூடாதவைகள் நம்மைக்கொண்டு அவரால் கூடும். அவர் பயணத்தில் நம்மோடு கூடவே வருகிறவராக இருக்கிறார். ஆகவே நாம் பெலன்கொண்டு அவருடைய சித்தத்தைச் செய்ய தீர்மானித்து அவரைப் பின்பற்றுவதில் உறுதியோடு இருக்கலாம். நமக்கு வெற்றி என்பது சர்வ நிச்சயம்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/l7FozYian3s