கர்த்தருக்கென்று பெரிய காரியங்களை சாதித்து முடித்த தீர்க்கதரிசியாகிய எலியா ஒரு நேரத்தில் சோர்ந்துபோய் வாழ்வதைவிட மரிப்பதே மேல் என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார். அந்த சூழலில் தேவன் ஒரு தூதனை அனுப்பி எலியாவுக்கு உணவுகொடுத்து அவரைத் தேற்றுகிறார். ஆம், நாம் எந்தவிதமான நொறுக்கப்பட்ட சூழலில் இருந்தாலும் நமக்கு சகலவிதமான ஆறுதலின் தேவனாக அவர் கூடவே இருக்கிறார்.
கர்த்தர் கடந்தகால காயங்களை ஆற்றுவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தை சந்திக்க உற்சாகப்படுத்துகிற தேவனாகவும் இருக்கிறார். வாழ்க்கையில் சில நேரங்களில் அழுத்தங்கள் ஏற்படுவதைத் நம்மால் தவிர்க்க முடியாது. ஆனாலும் நம்மால் மாற்ற முடியாத பிரச்சனைகளை அவர் கைகளில் கொடுக்கும்போது அவர் அதை மாற்ற வேண்டிய விதத்தில் மாற்றி நமக்கு இளைப்பாறுதல் தரக்கூடிய தேவனாக இருக்கிறார்.
நம்முடைய பிரச்சனைகள் பலவற்றுக்கு பிசாசானவன் காரணமாக இருந்தாலும், நாமும்கூட சில நேரங்களில் நமக்கு நாமே பிரச்சனைகளை உருவாக்கிக்கொள்ளக்கூடியவர்களாக இருக்கிறோம். இதன்மூலம் நாம் செல்லவேண்டிய ஆவிக்குரிய பயணமானது தடைப்படுகிறது. ஆனால் அவைகளையும் மேற்கொள்ள கர்த்தர் நமக்கு ஞானம் தருகிறார். ஆம் பிரியமானவர்களே, இது நாம் சோர்வில் உழலும் நேரமல்ல, நாம் போகவேண்டிய தூரம் அதிகம். சகலவிதமான ஆறுதல்களின் தேவன் நம் வழிதுணையாக நம்மோடுகூடவே இருக்கையில் நமக்கு பயம் எதற்கு?
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/56dyeQUiJ0o