அன்புக்கும் தாழ்மைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அன்புக்கு அறிவும், உணர்வும் இருப்பதால் அது தாழ்மையைத் தரித்துக்கொள்ளுகிறது. எனவே அது இறுமாப்பாய் இராது. ஐசுவரியமும், அறிவும் இறுமாப்பை உண்டாக்கும் என்று வேதம் சொல்லுகிறது. ஆனால் ஐசுவரியத்திலும், அறிவிலும் நிறைவானவராக இருக்கும் தேவனோ அன்புள்ளவராகவே இருக்கிறார். அவர் சாந்தமும், மனத்தாழ்மையும் உடையவராக இருக்கிறார்.
உலகத்தின் கட்டமைப்பு கறைபட்டதாக இருக்கிறபடியால், ஐசுவரியமும் அறிவும் இருந்தால் ஒரு மனிதன் இறுமாப்புள்ளவனாக இருக்க வாய்ப்புள்ளது என்றாலும், அவன் மனம் சரியாக இருந்தால் அவன் குணமும் சரியாக இருக்க முடியும். எனவேதான் தேவன் உலகத்தின் கட்டமைப்பை மாற்றாமல் மனிதனுடைய இருதயத்தை மாற்றுகிறார். பொருள் ஆதாரமல்ல, அவர் தாமே ஆதாரம் என்பதை மனிதனுக்கு உணர்த்துகிறார்.
எந்த மனிதனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது என்று லூக்கா 16:13,14 வசனங்கள் சொல்லுகின்றன. உலகப்பொருளை ஆதாரம் என்று நினைத்து அதற்கு ஊழியம் செய்யும் மனிதன் இறுமாப்புள்ளவனாக இருக்கிறான். ஆனால் அந்த உலகப்பொருளை தனக்கு அடிமையாக்கி தேவனை கனப்படுத்தும் மனிதன் தேவனால் அங்கீகரிக்கப்படுகிறான். உலகப்பொருளை சம்பாதிக்கும் சாமர்த்தியத்தை தேவனே நமக்குக் கொடுத்தார் என்று நாம் தேவனை அங்கீகரித்து, அவரையே முதன்மைப் படுத்தும்போது ஐசுவரியம் நம்மை கறைப்படுத்தாது.
தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான் என்று நீதிமொழிகள் 11:28 சொல்லுகிறது. நாம் ஐசுவரியத்தின் பின்னால் செல்லாமல் தேவனுக்குப் பின்னால் செல்லும்போது மற்றவர்கள் தேடிப்போகும் விஷயங்களெல்லாம் நம்மைத் தேடி வரும். தாவீது தேவாலயம் கட்டுவதற்கென்று பொன்னையும், வெள்ளியையும், தேவையான அத்தனை விலையேறப்பெற்ற பொருட்களையும் சம்பாதித்து வைத்திருந்தாலும் அதனிமித்தம் மேன்மைபாராட்டாமல் இவைகளையெல்லாம் தேவனே தந்தது என்று அவரை மகிமைப்படுத்தினபடியால் அவன் தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற தாசன் என்று அங்கீகரிக்கப்பட்டான்.
எனவே பணம் ஒரு கருவிதான். அது விக்கிரகமாக மாற நாம் அனுமதிக்கக்கூடாது. அப்படி மாறினால் நமக்குள் இறுமாப்பு உருவாக அது காரணமாகிவிடும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/_-Tu9FE9TVk