ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார் என்று ஏசாயா 11:2ல் தீர்க்கன் மேசியாவைக் குறித்துச் சொல்லுகிறார். இது அவருக்கும் மட்டுமல்ல, அவரது அடியாராகிய நமக்கும் பொருந்தும்.
கர்த்தருடைய ஆவியானவர் எந்த சூழ்நிலையிலும் நம்மை நடத்துகிறவராக இருக்கிறார். அவர் தடைகளை நீக்குகிறவர் மட்டுமல்ல, சில நேரங்களில் அவரே தடையும் செய்யக்கூடியவராக இருக்கிறார். நம்முடைய செயல்கள் தேவநோக்கத்துக்கு இசைந்து வராத பட்சத்தில் அவரே நம்மைத் தடை செய்யக்கூடும். இதுபோன்ற சூழல்களில் ஆவியானவர் நமக்கு சூழலைப் புரிந்துகொள்ளும் ஞானத்தைத் தந்து, அதற்கேற்ற ஆலோசனை கொடுத்து, அதை செயல்படுத்தவும் நமக்கு உதவி செய்கிறார்.
எனவே ஒரு விசுவாசி கடைசியாக அல்ல, முதலிலேயே அவரைச் சார்ந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட விசுவாசிதான் பெலனுள்ளவன். இந்த சூழ்நிலையை நிதானிக்க கிருபை தாரும், ஆலோசனை தாரும், பெலன் தாரும் என்று அவரிடம் கேட்க வேண்டும். கர்த்தராகிய இயேசுவுக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியை அளித்த பிதாவானவர் அதை நமக்கும் தர உண்மையுள்ளவராக இருக்கிறார்.
கர்த்தருடைய ஆவியானவர் நம்மோடிருப்பதை நாம் உணர்ந்து, அவரைச் சார்ந்துகொண்டு அவருடைய குரலுக்கு செவிகளை தீட்டிவைத்துக்கொள்ளும்பொழுது நமக்குத் தேவையான ஆலோசனையையும், ஞானத்தையும், பெலனையும் அவரே தந்து நம்மை வழிநடத்துகிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Tm_KbjvBszI