பரிசுத்த வேதாகமத்தில் தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு ஏற்படுத்தப்பட்டவர்கள். அவர்களுடைய வாழ்விலும்கூட விதவிதமான பாடுகளும் துன்பங்களும் அவர்களுக்கு வந்தன. ஆனால் அவர்கள் தேவபெலத்தோடு பொறுமையாக களத்தில் நின்று அந்தப் பாடுகளை வென்று வெற்றிவாகை சூடினார்கள். இன்று நாமும்கூட ஜெயிக்க விரும்பினால் ஜெயித்த அவர்களை நோக்கிப் பார்த்து அவர்கள் வாழ்விலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்க்கை நமக்கு போதனையாக எழுதப்பட்டிருக்கிறது.
நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன் என்கிற அறிவே வேதத்தில் நாம் காணும் விசுவாச வீரர்களை களத்தில் நிற்க வைத்தது. அவர்கள் சரியானதை செய்தார்கள், அதைச் செய்துகொண்டே இருந்தார்கள். விளையச்செய்கிற தேவன் நிச்சயம் விளையச்செய்வார் என்கிற உறுதி அவர்களுக்கு இருந்தது. அதன் நிமித்தம் அவர்கள் பொறுமையைக் கற்றுக்கொண்டிருந்தார்கள்.
தேவனுடைய வார்த்தையிலிருந்துதான் விசுவாசம் உண்டாகிறது, அந்த விசுவாசம்தான் பொறுமைக்கு அஸ்திபாரமாக இருக்கிறது. ஆகவே நமக்குள் பொறுமை பெருகவேண்டுமானால் வார்த்தை நமக்குள் பெருக வேண்டும். அந்த வார்த்தை நம்முடைய பார்வையை தெய்வீகக் கோணமுடைய தெளிவான பார்வையாக மாற்றும். அந்த தெய்வீகப் பார்வையே தெய்வீகப் பொறுமையை நமக்குள் தரக்கூடியதாக இருக்கிறது.
இதன் நிமித்தம் நாம் அடையக்கூடிய பாடுகள் நம்மை மேலும் கிறிஸ்துவுக்குள் பெலனடையச் செய்து நம்மை உருவாக்குகிறது. அவை ஒருநாளும் நம்மை உடைப்பதில்லை. அவர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்கிறவராக இருக்கிறபடியால் நமது நிந்தைகளையெல்லாம் மாற்றி நம்மை உயர்த்தி உயரமான ஸ்தலங்களில் நம்மை உலவச் செய்வார். அதுவரை தெய்வீகப் பொறுமை நம்மை ஆண்டுகொள்ளக்கடவது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/E1IOLpgd5zY