உயிர்தெழுந்தார்: நான் அசைக்கப்படுவதில்லை

Home » உயிர்தெழுந்தார்: நான் அசைக்கப்படுவதில்லை

உயிர்தெழுந்தார்: நான் அசைக்கப்படுவதில்லை

ஒரு மனிதனை மரணம் ஆட்கொள்ளுமானால் அவனால் மீளவே முடியாது. ஏனெனில் மரணத்தின் கட்டு அத்தனை வலிமையானது. எல்லோரையும் கட்டிவைத்த மரணத்தினால் கர்த்தராகிய இயேசுவைக் கட்டி வைக்க முடியவில்லை. அவர் மரணத்தின் கட்டை அறுத்து உயிரோடு எழுந்தார். அவர் எழுந்தபடியால் அவர் நம்மையும் எழும்பி நிமிர்ந்து நிற்கப்பண்ண வல்லவராக இருக்கிறார். அவரது உயிர்த்தெழுதலால் மனுக்குலம் அடைந்த நன்மை இதுதான்.

அவர் பாவத்துக்கென்று ஒருதரம் மரித்து, நீதிக்கென்று பிழைத்திருப்பதால் நாமும் அதை செயல்படுத்தும்படி சத்தியத்தை விளங்கிக் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. மரணத்தை ஜெயித்தவர் நம் பக்கத்தில் இருக்கிறார். நமக்கு உதவி செய்யும்படியும், நம்மை உயர்த்தும்படியும் நமது பக்கத்தில் இருக்கிறார். அவர் அதற்காகவே உயிர்தெழுந்திருக்கிறார். எனவே நம்மை கீழே விழத்தள்ள நினைக்கிறவர்கள் மீது நமது கவனம் செல்லாமல் நம்மை எழும்பி நிற்கப்பண்ணுகிற அவர்மீதே நமது கவனம் குவியட்டும்.

அவர் நம் பக்கத்தில் இருப்பது மட்டுமல்ல, நமது பட்சத்திலும் இருக்கிறார். நமது சார்பாக நிற்கிறார் எனவே அவரை எப்பொழுதும் நமக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக் கொண்டிருப்பது மட்டுமே நாம் நிறைவேற்ற வேண்டிய கடமையாக இருக்கிறது. அவரை முன்பாக நிறுத்தி நோக்குவதென்றால் அவரது வார்த்தை மீது கவனம் வைப்பது என்பது அர்த்தமாகும். கவனத்தை அவர்மேல் வைக்கமுடியாவிட்டாலும் அதற்கும் உதவி செய்ய அவர் நம்மோடு கூடவே இருக்கிறார். அவர் மட்டுமே நமக்கு உதவி செய்ய முடியும். ஆமேன்!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/OXOZTR0vXSc

>