தேவசித்தம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்கள் நிச்சயமாய் துன்பப்படுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. துன்பத்தின் மூலம் நாம் தேவனுடைய பிரமாணங்களைக் கற்றுக்கொள்கிறோம். அதுதான் நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. ஏனெனில் சோதிக்கப்பட்டபின்னர் நாம் பொன்னாக விளங்குவோம்.
ஆனால் இதுபோன்ற சோதனைகளில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், துன்பங்கள் வரும்போது கூடவே பயமும் சேர்ந்து வருகிறது. பயம் இருந்தாலே செய்ய வேண்டியதைச் செய்ய மாட்டோம். சத்துருவானவன் நம்மை தடுத்து நிறுத்த நம்மை பயமுறுத்த முயற்சிக்கிறான். எருசலேம் அலங்கத்தைக் கட்டிய நெகெமியாவுக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கச் சென்ற ஆதி அப்போஸ்தலர்களுக்கும் இதுதான் நடந்தது.
பயம் இருந்தாலும் செய்ய வேண்டியதைச் செய்வதுதான் தைரியம். தீமை வலிமையானதாக இருந்தாலும் நன்மை அதைப் பார்க்கிலும் வலிமையுள்ளது. ஆகவே கர்த்தருடைய துணையோடு நம்மால் தீமையை நன்மையால் வெல்ல முடியும். நெகெமியாவும், ஆதி அப்போஸ்தலர்களும் பயமுறுத்தப்பட்டாலும் தொடர்ந்து தாங்கள் செய்ய வேண்டியதை தைரியமாகச் செய்து சரித்திரத்தில் இடம் பெற்றது இந்த நம்பிக்கையில்தான்.
பயத்துக்கும், ஜெயத்துக்கும் இடையில் ஒரு விஷயம் நடைபெற வேண்டும். அதுதான் நம்முடைய ஜெபம். நாம் ஜெபிக்கும்போது நம்முடைய ஜெபத்துக்கு விரோதமாக மனிதர்களால் எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை நாம் ஜெபிக்க முடியாத அளவுக்கு ஆவியில் சோர்ந்திருப்போமானால் நாம் நமது சக விசுவாசிகளோடு கூடி ஜெபிக்கலாம். நாம் ஜெபிக்கும்போது தேவன் அவருடைய சிந்தையை நமக்குத்தருகிறார். நாம் அதை விசுவாசத்தோடு அறிக்கை செய்யும்போது மாற்றம் வருகிறது. நம்மிடம் ஜெயம் வந்து சேருகிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/DgvjK_78ms8