தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார் என்று 1 கொரிந்தியர் 2:9,10 வசனங்கள் கூறுகின்றன.
தேவன் நமக்கென்று ஆயத்தம் பண்ணினவைகளை நம் காணாதிருந்தாலும், செவிகள் கேட்காதிருந்தாலும் படிப்படியாக தேவன் அவைகளை நமக்கு ஆவியில் வெளிப்படுத்துகிறார். அவை ஒரு காலம் வரும்போது நம் கண்களுக்குப் புலப்படும். அது புலப்படும்வரைக்கும் கண்களை விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமான கிறிஸ்துவின் மீது பதித்து வைக்க வேண்டும்.
நம்மீது அன்பு வைத்திருக்கிற தேவன் நமக்கென்று நன்மைகளை ஆயத்தம் பண்ணியிருக்கிறார், ஆயத்தம் பண்ணினவர் அதைப் பரிசுத்த ஆவியானவர் மூலம் அறிவிக்கிறார், கண்களுக்குப் புலப்படாதவைகளை கண்களுக்கு புலப்படும் முன்னதாக வார்த்தையின் மூலம் விளங்க வைக்கிறார். ஆம், நாம் நம்பக்கூடிய வார்த்தை நம் நம்பிக்கைக்கு உறுதி கொடுக்கிறது. காணப்படாத ஆசீர்வாதங்கள் காணப்படுவதற்கும், காணப்படும் பிரச்சனைகள் காணப்படாமல் போவதற்கும் வசனமே ஆதாரமாக இருக்கிறது.
அவருடைய வார்த்தையைக் கேட்ட நாம் கேட்டதை புரிந்துகொள்கிறோம், நமக்குள் நம்பிக்கை வருகிறது, இருதயத்தின் நிறைவினால் வாய் பேசுகிறது, வார்த்தையின்படியே கிரியை செய்கிறோம். அதன்விளைவாக காணப்படாதிருந்தவைகள் நம் கண்களுக்கு முன்பாகத் தோன்றுகிறது. அது நம் கண்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/U5PyaQJEzsg