ஒருவர் பெலவீனரைக் கையாளும் விதத்தில்தான் அவருடைய பெலன் வெளிப்படுகிறது என்பார்கள். காரணம் அவரிடம் அன்பு எவ்வளவு உள்ளது என்பதுதான் அவரிடம் பெலன் எவ்வளவு உள்ளது என்பதைத் தீர்மானிக்கிறது. அன்பானது அபரிமிதமான சகிப்புத்தன்மை வாய்ந்தது. எவ்வளவு காலம் ஆனாலும் பெலவீனப்படாமல் சகிக்கக்கூடியது.
அன்பானது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சகித்து, சாதிக்கக்கூடியதாக இருக்கிறது. அன்பு ஆட்களிடம் எதிர்மறையான பொறுமையாக இருக்கிறது, எதிர்மறையான சூழ்நிலைகளிடம் விடாமுயற்சியோடு இருக்கிறது. அது ஒருபோதும் முறுமுறுப்போடு அதைச் செய்வதில்லை.
கர்த்தராகிய இயேசுவே அன்பின் மொத்த வெளிப்பாடாகவும், ஆகச்சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கிறார். அவர் கடைசிமட்டும் சகித்து, தேவன் நியமித்த எல்லாவற்றையும் வெற்றிகரமாக முடித்து, “எல்லாம் முடிந்தது” என்று சொல்லி தமது ஜீவனை விட்டார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று எபிரேயர் 12:2 கூறுகிறது.
அவரைப் பின்பற்ற வேண்டிய அவருடைய சீஷர்களாகிய நாமும் அன்பு செலுத்துகிறதிலும், சகிக்கிறதிலும் அவரையே பின்பற்றுவோமாக! அவரே நமக்கு சகிக்கிறதற்கான பெலனையும், சாதிக்கிறதற்கான உதவியையும் செய்கிறவர். சகிக்கிறவர்களாகிய நமக்கு ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்மீது மாத்திரமே நமது கண்களையும், கவனத்தையும் பதித்து நமக்கு நியமிக்கப்பட்டிருக்கிற ஓட்டத்தில் ஜாக்கிரதையோடு ஓடுவோமாக!
செய்தி:பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/x-4seCWcywo