அப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 1:12ல் நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன் என்று அறிக்கையிடுகிறார். கர்த்தரை அறிகிற அறிவு நமக்கு மன தைரியத்தையும், சமாதானத்தையும் தருகிறது. தன்னைக் குறித்த தேவசித்தத்தை ஒரு மனிதன் அறிந்துகொள்ளும்போது அவன் பதட்டமும், பயமும் நீங்கி தெளிவடைகிறான்.
தனக்கு வீடு கட்டுவேன் என்று கர்த்தர் தாவீதுக்கு சொன்ன வார்த்தை கேட்டு தாம் மனதைரியம் அடைந்ததாக தாசனாகிய தாவீது கூறுவதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். ஆகவே தேவசித்தம் வெளிப்படும்போது விசுவாசம் செயல்படுகிறது என்பதை நாம் அறிந்துகொள்ளுகிறோம்.
நமக்கு நன்மை செய்ய வேண்டுமென்பதே அவருடைய சித்தம் என்பதை விளங்கிக்கொள்ளும்போது நமக்கு மனதைரியம் இயல்பாகவே உண்டாகிவிடுகிறது. இது புரியும்போது நமக்கு இதுதான் நடக்கப்போகிறது என்ற தெளிவு ஏற்படுகிறது. அதைவிட குறைவானதொன்று நடக்கும்போது அல்லது கிடைக்கும்போது மனம் அதை ஏற்க மறுத்து தேவசித்தமே என் வாழ்வில் நடைபெற வேண்டும் என்ற உறுதி உண்டாகிறது.
எனவே உம்முடைய விருப்பம் நிறைவேறுவதாக என்று நாம் தைரியமாக ஜெபிக்கலாம். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்று யோவான் 15:7 கூறுகிறது. அவருடைய வார்த்தை நாம் எதைக் கேட்கவேண்டுமோ அதைக் கேட்கும் ஞானத்தையும், அதைக் கேட்க தைரியத்தையும் நமக்குத் தருகிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/DZAFjC7JyAo